அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்… தோண்ட தோண்ட வந்த 67 எலும்புக்கூடுகள்… பின்னணி என்ன?
ரோம் நகருக்கு அருகில் ஒரு சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ ஏற்பாடு செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஷாக் மேல் ஷாக் ஏற்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவ குறிப்பிட்ட இடத்தை ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது அதில் இருந்து 67 எலும்புக்கூடுகள் அடுத்தடுத்து கிடைத்துள்ளன.
அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக மேற்கொண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டர்னர், அதில் இவை அனைத்துமே 57 கல்லறைகளில் இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, தோண்ட தோண்ட வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைக்கவில்லை, தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த தோல் செருப்புகள் அனைத்துமே எலும்புக்கூடுகளோடு சேர்ந்து கிடைத்துள்ளன.
ரோமுக்கு வடக்கே, பண்டைய நகரமான டார்குனியாவுக்கு அருகில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த இந்த கண்டுபிடிப்பு, அதிகாரிகளுக்கு ஆச்சரியமாக அமைந்தது, அந்த பகுதி இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு பிரபலமானது என கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சியின் போது, தங்க நெக்லஸ்கள், காதணிகள், அம்பர் மற்றும் வெள்ளி மோதிரங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துகள், விலையுயர்ந்த கற்கள், டெரகோட்டா மண்பாண்டங்கள், நாணயங்கள், மெருகூட்டப்பட்ட கண்ணாடிகள் மற்றும் ஆடைகள் கூட கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றின் விலையுயர்ந்த காலுறைகள் மற்றும் காலணிகளை அணிந்திருந்த பல எலும்புக்கூடுகளையும் கூட ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னணி அகழ்வாராய்ச்சியாளர் இமானுவேல் கியானினி, CNN-னிடம் கூறுகையில், இந்த எழும்புக்கூடுகள் நகரங்களில் இருந்து வரும் மேல்தட்டு ரோமானிய குடும்பங்களின் உறுப்பினர்களுடையது என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், ‘அங்கு சில புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று எங்களுக்கு ஒரு சந்தேகமும் எழுந்தது’ என்றார். மற்றொரு ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் பெரும்பாலானவை வெவ்வேறு வகையானவை, அதாவது அவை குறைந்தபட்சம் இரண்டு பேருக்காக கட்டப்பட்டவை, அவர்கள் ஒருவேளை ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாகவும் இருக்கலாம் என்று கியானினி கூறினார். சில எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன என்றும் கூறினார்.
முழு குடும்ப உறுப்பினர்களுக்கும் கல்லறைகள் கட்டுவது ஒரு பொதுவான பண்டைய ரோமானிய பண்பு, ஆனால் இவை அவற்றின் உட்புற அலங்காரத்தில் சிறந்தவையாக உள்ளதால், அது செல்வத்தையும் அந்தஸ்தையும் பிரதிபலிக்கிறது என்று கியானினி கூறினார். இது தொடர்பாக பல ஆராய்ச்சிகளும் நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.