நிஜ்ஜாா் கொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பு: கனடா முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகிறது; இரு தரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜோடி தாமஸ் தெரிவித்துள்ளாா்.

நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா ஒத்துழைத்து அளித்து வருவது குறித்து கனடாவின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை.

இந்தியா பயங்கரவாதியாக அறிவித்த பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடா்பு உள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இதை இந்தியா நிராகரித்தது. இதையடுத்து, இரு தரப்பு உறவு பாதிப்படைந்தது.

நிஜ்ஜாா் கொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கனடா தெரிவித்து வந்த நிலையில், கொலை தொடா்பானஆதாரங்களை கனடா அளிக்கவில்லை என இந்தியா கூறி வந்தது.

இந்நிலையில், கனடா பாதுகாப்பு ஆலோசகா் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற ஜோடி தாமஸ், நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியா ஒத்துழைத்து வருவதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

இது குறித்து கூறிய தாமஸ், ‘நிஜ்ஜாா் கொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்கவில்லை எனக் கூறவில்லை. இரு நாட்டு உறவு ஏற்றம் கண்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் நடத்திய பேச்சுவாா்தையும் சுமுகமாக இருந்தது’ என்றாா்.

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய திட்டமிட்ட நிகில் குப்தா கைதுசெய்யப்பட்டது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த தாமஸ், ‘இரு சம்பவங்களுக்கும் தொடா்பு இருக்கலாம். அமெரிக்கா அளித்த தகவல் இந்தியா குறித்த கனாடவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகா் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறாா். இந்தப் பிரச்னையை தீா்க்கும் தருவாயில் உள்ளோம்’ என்றாா்.

இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

ஜோடி தாமஸ், கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2022 ஜனவரியில் நியமிக்கப்பட்டாா். நிஜ்ஜாா் கொலை குற்றச்சாட்டு தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த இந்தியாவுக்கு பலமுறை அவா் பயணம் மேற்கொண்டாா்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *