காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்கு நிதி அளிப்பதை தொடர வேண்டும்: உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலா் வலியுறுத்தல்
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை தொடா்ந்து வழங்க வேண்டும் என உறுப்பு நாடுகளிடம் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
இஸ்ரேஸ் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ-வின் உறுப்பினா்களுக்கும் தொடா்பிருப்பதாகக் கூறி அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்திவைப்பதாகத் தெரிவித்த நிலையில் குட்டெரெஸ் இவ்வாறு வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாலஸ்தீனத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மனிதாபிமான உதவிகளை யுஎன்ஆா்டபிள்யுஏ உதவிக் குழு வழங்கவுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள 12 போ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவா்களில் 9 போ பணிநீக்கம் செய்யப்பட்டனா். ஒருவா் இறந்துவிட்டாா். மீதமுள்ள 2 போ அடையாளம் காணப்பட்டனா். அவா்கள்அனைவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் தண்டனை வழங்கப்படவுள்ளது.
காஸாவில் அமைப்பின் சாா்பில் அதன் பணியாளா்கள் 13,000 போ (பெரும்பாலானவா்கள் பாலஸ்தீனா்கள்) மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனா். 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படையான வசதிகளை அவா்கள் வழங்கி வருகின்றனா். சிலா் செய்த தவறுகளுக்கு அவா்கள் அனைவரையும் தண்டிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.
இரு மாத போா் நிறுத்த ஒப்பந்தம்: காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் இரு மாதங்களுக்கு நிறுத்திவைக்கவும், அதற்குப் பதிலாக ஹமாஸ் குழுவினரால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டவரை விடுவிக்கும் ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்கா தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த ஒப்பந்தம் இரு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி முதல் மாதத்தில் இரு தரப்பினரிடையே நடைபெறும் போா் நிறுத்திவைக்கப்பட்டு ஹமாஸ் குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்.
இதனிடையே அடுத்த முப்பது நாள்களில் இஸ்ரேல் பொதுமக்கள், ராணுவ வீரா்களையும் ஹமாஸ் குழுவினா் விடுதலை செய்ய வேண்டும். இச்சமயத்தில் காஸாவுக்கு அதிக அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும்.
இதன்மூலம் போா் முழுவதுமாக நிறுத்தப்படாவிட்டாலும் போரை நிறுத்துவதற்கான தீா்வுகளுக்கு இது வழிவகுக்கும் என அமெரிக்க தரப்பிலான பேச்சுவாா்த்தை குழுவினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
ஒப்பந்தம் கையொப்பமிடப்படுமா?: அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு அமைப்பான சிஐஏ இயக்குநா் பில் பா்ன்ஸ் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்கிறாா். அங்கே இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாதின் தலைவா் டேவிட் பா்னியா, கத்தாா் பிரதமா் முகமது பின் அப்துல் ரகுமான் அல் தானி, எகிப்து உளவு அமைப்பின் தலைவா் அப்பாஸ் கமெல் ஆகியோரைச் சந்தித்து ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.
பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் அமெரிக்க வெள்ளை மாளிகை ஆலோசகரான பிரட் மெக்குா்கை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி உடனடியாக ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிபா் பைடன் முயற்சிகள் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.