ஆன்மிகப் பயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி திருகோவிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 207 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, இந்து சமய அறநிலையத்துறை ஆன்மிகப் பயணத்திற்கு முக்கியத்துவம் தருகின்ற வகையிலும், ஒரே நேரத்தில் பல்வேறு திருக்கோயில்களுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
ஆடி மாதங்களில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதங்களில் வைணவ திருக்கோயில்களுக்கும் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது. சீனாவில் உள்ள மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயிலுக்கு புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கும், அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
அதே போன்று ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்தில் கடந்த ஆண்டு 200 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த ஆண்டு 300 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில் அதன் முதற்கட்ட பயணம் வரும் 31-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ. 75 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் 207 மூத்த குடிமக்கள் இன்று(நேற்று)புறப்படுகின்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு போர்வை, சால்வை, துண்டு, பெட்சீட், குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகளை வழங்கியுள்ளோம். மூத்த குடிமக்களுடன் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கு இதுவரையில் எந்த விண்ணப்பமும் வரவில்லை. ஒரு சிலர் அக்கோயிலுக்கு செல்வதற்கான மார்க்கத்தை கேட்டபோது இந்து சமய அறநிலைத்துறை பயண மார்க்கத்தை அவர்களுக்கு தெரிவித்திருக்கின்றது. விண்ணப்பங்கள் வந்தால் அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.