பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவு… இறுதி நாளில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு…
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தைப்பூச திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக, பெரியநாயகி அம்மன் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் முத்துகுமாரசாமி, வள்ளி-தெய்வான அழைத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனைதொடர்ந்து, வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருக பக்தர்கள் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதம் முடிந்தவுடன் முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி மகிழ்ச்சி அடைவார்கள். இத்திருவிழா பழனியில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெற்றது.