காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலி

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-இல் ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே காஸா பகுதியின் 2-ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை சுற்றி வளைத்து கடந்த சில நாள்களாகவே அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினா் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாது, இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையால் நாசர் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளால் நிரம்பியுள்ளது.
தெருக்களில் சிதறிக் கிடக்கும் டஜன் கணக்கான உடல்களை மருத்துவக் குழுக்களால் அடைய முடியவில்லை, உள்ளூர்வாசிகள் இறந்தவர்களை கான் யூனிஸ் கல்லறைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் நகரின் நாசர் மருத்துவமனையின் முற்றத்தில் அடக்கம் செய்ய வேண்டியிருந்தது எனத் தெரிவித்துள்ளது.
இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 26,422 -ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 65,087 போ காயமடைந்துள்ளனா் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.