மருத்துவமனையிலிருக்கும் மன்னர் சார்லஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல்: சற்று கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு இரவுகளுக்குப் பின் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேற்றும் மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து சற்றே கவலை உருவாகியுள்ளது.
மன்னருக்கு அறுவை சிகிச்சை
புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் சார்லசுக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த புரோஸ்ட்ரேட் சுரப்பி என்பது ஆண் இனப்பெருக்க மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு சுரப்பியாகும்.
வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர், இரண்டு இரவுகளுக்குப் பிறகு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நேற்றும் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. அதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.
மன்னருடைய உடல் நிலை
மேலும், மன்னர் வீடு திரும்பினாலும், முழு நேரம் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் எதிலும், ஒரு மாதத்திற்கு பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது
ஆனாலும், வீட்டிலிருந்தவண்ணம் ஆவணங்கள் தொடர்பிலான பணிகள், மற்றும் முக்கியஸ்தர்கள் சந்திப்பு ஆகியவற்றை அவர் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.
மன்னர் அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில்தான் அவரது மருமகளான இளவரசி கேட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.