‘Go Back Modi vs Vanakkam Modi! டிஆர்பி ராஜாவுக்கு அண்ணாமலை சவால்!’
திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புயலால் தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்கள் உற்பத்தி திறனை இழந்துவிட்டது. தூத்துக்குடியின் உற்பத்தி திறனை மீண்டும் கொண்டு வர 2 ஆண்டுகள் ஆகும். தூத்துக்குடியில் 120 அடி அலகம் இருந்த பக்கில் கால்வாயை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 20 அடியாக குறைத்துவிட்டனர். இதனால் வரும் தண்ணீர் கொப்பளித்து வெளியே வந்துவிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பணம் தருவது மத்திய அரசாக இருந்தாலும், செயல்படுத்துவது மாநில அரசுதான்.
வெள்ளத்தால் மாநில அரசு எந்த படிப்பினையும் கற்கவில்லை, எப்படி பழியை மத்திய அரசு மீது போடலாம் என யோசிக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் அவர்கள் தாமாக முன் வந்து உள்துறை அமைச்சரை பார்த்து ஹெலிகாப்டரை கொண்டு வந்தார்கள். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வராததது ஏன் என்ற கேள்விக்கு, பிரதமரின் வேலை சூழ்நிலையை கணித்து அதற்கு ஏற்றார் போல் முடிவு எடுப்பது. பிரதமர் சில இடங்களுக்கு செல்கிறார். சில இடங்களுக்கு ஆட்களை அனுப்பி விவரத்தை கேட்டறிகிறார். தமிழ்நாட்டுக்கு ராஜ்நாத் சிங் அவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளார்.
கோ பேக் மோடி என்பதை விட வணக்கம் மோடி என்பது பல மடங்கு அதிகமாக ட்ரண்ட் ஆகும். இதே பாஜகவினர் முதல்வர் எங்கு சென்றாலும் கோ பேக் ஸ்டாலின் என்று எங்களுக்கு ட்ரண்ட் செய்ய தெரியும். ஆனால் முதலமைச்சர் என்பதால் அவருக்கான மரியாதை கொடுத்து வருகிறோம். இன்னும் எங்க பசங்க எதையும் ஆரம்பிக்கவில்லை, அமைதியாக இருங்கள் என்று சொல்லி உள்ளோம். டிஆர்பி ராஜா எங்களுக்கு சவால் விடட்டும், இதே முதலமைச்சருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என நாங்கள் செய்து காட்டுகிறோம். ட்விட்டரில் நாங்கள் கம்பு சுத்தும் ஆட்கள். எங்கள் முதலமைச்சரை எங்கள் மாநிலத்திலேயே கேவலப்படுத்த வேண்டாம் என நினைக்கிறோம் என அண்ணாமலை கூறினார்.