STR 48 Drop: டீலில் விட்ட ரஜினி.. கடையை இழுத்து மூடிய கமல்?.. – STR 48 படம் ட்ராப்பா? – உண்மை என்ன?
சிலம்பரசன் நடிப்பில், கமல் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்.டி.ஆர் 48 திரைப்படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியாகி வருகிறது.
இது குறித்து ஆகாயம் தமிழ் சேனலுக்கு பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, ” கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினிகாந்த் பார்க்கிறார்.அவருக்கு படம் பிடிக்கிறது. இதனையடுத்து அந்த படத்தின் இயக்குநர் தேசிங்கு ராஜாவை அழைத்து பேசுகிறார்.
அவர் ஒரு இயக்குநர் என்பதை தாண்டி, தன்னுடைய மிகப்பெரிய ரசிகர் என்பதை ரஜினிகாந்த் தெரிந்துகொள்ள, ஏதாவது லைன் இருந்தால் சொல்லுங்கள் என்கிறார். இதனையடுத்து தேசிங்கு பெரியசாமி லைன் ஒன்றைச் சொல்ல,அது ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து போனது.
இதை கதையாக மாற்ற முடியுமா? என்று ரஜினி கேட்க, அவரும் கதையாக மாற்றலாம் என்று வேலையில் இறங்குகிறார்.ரஜினியும் தன்னுடைய ஆலோசனைகளை அந்த கதையில் புகுத்துகிறார். இந்த வேலைகள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்தது. இந்த நிலையில்தான், திடீரென்று ரஜினிகாந்த் தேசிங்கு பெரிய சாமியை, நீங்கள் இந்த கதையை வேறு எந்த கதாநாயகனுக்கு வேண்டுமென்றால் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.
இதனையடுத்து தான் அந்த கதை பல்வேறு தயாரிப்பாளர்களிடம் சென்று, கலைப்புலி தாணுவின் கைக்கு வந்தது. அவரோ இந்த மாதிரியான பெரிய சப்ஜெக்ட்டை எல்லாம் கமல் சாரால்தான் பண்ண முடியும் என்று சொல்ல, இந்த கதை கமல் கைக்கு சென்றது.
கமலோ அந்த கதையில் சிலம்பரசனை கமிட் செய்து நடிக்க வைத்து, தானே அந்த படத்தை தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இதனையடுத்து தான் அந்த படம் தொடர்பான போஸ்டர் வெளியானது.
ஒவ்வொரு முறையும் இந்த படம் ட்ராப் என செய்திகள் வரும்பொழுது, சிலம்பரசன் தரப்பிலிருந்து யாராவது ஒருவர் பேசி படம் தொடர்பான வேலைகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கின்றன. சிலம்பரசன் வெளிநாடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்று சொல்வார்.
ஆனால், தொடர்ந்து இந்த படம் ட்ராப் என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதனை தவிர்ப்பதற்காக ராஜ்கமல் ஃபிலிம்சிலிருந்து ஏதாவது ஒரு போஸ்டரோ அல்லது ஒரு சின்ன வீடியோ வெளியிட்டு இருந்தால், இந்த தகவல் அப்படியே அமிழ்ந்து சென்றிருக்கும். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விதமான அப்டேட்டும் வராத காரணத்தால் உண்மையில் இந்த படம் ட்ராப் ஆகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று பேசினார்.