அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா.. பங்கேற்ற ஆளுநர் ஆர்.என் ரவி.. புறக்கணித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்
சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று 40,414 பட்டதாரிகளில் 348 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்பதாக அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் வருவார் என்று அதற்கான பல்வேறு ஏற்பாடுகள் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி வரைக்கும் ராஜகண்ணப்பன் பல்கலைக்கழகத்திற்கு வரவில்லை. அவருக்காக போடப்பட்டிருந்த நாற்காலி காலியாகவே இருந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகாலமாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் பல்வேறு கால கட்டங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். அதற்கான காரணத்தையும் கூறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் பதவி பறிபோனதை அடுத்து ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஆளுநர் ரவி விசயத்தில் பொன்முடி பாணியை கடைபிடிக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன். இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.
முன்னதாக அண்ணா நினைவு நாளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வேறு தேதிக்கு பட்டமளிப்பு விழாவை தள்ளி வைக்க அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை அதனை ஏற்க மறுத்த நிலையில் இன்றைய விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.