வாழ்க்கையில் போட்டி இருக்க வேண்டும்.. ஆனா ஆரோக்கியமானதாக.. – பிரதமர் மோடி
தங்கள் குழந்தைகளை மற்றொரு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது குறித்து டெல்லியில் பிரதமர் மோடி, மாணவர்களுடன் (Pariksha Pe Charcha 2024) கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியாவது, பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தைகளின் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வாறு செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். அதனை சமாளிக்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டையே விசிட்டிங் கார்டாக பெற்றோர்கள் கருதுகிறார்கள். வாழ்க்கையில் சவால்கள் இல்லை என்றால், வாழ்க்கை உற்சாகமற்றதாகவும், மனச்சோர்வடையாததாகவும் மாறும். போட்டி மற்றும் சவால்கள் வாழ்க்கையில் உத்வேகமாக செயல்படுகின்றன. வாழ்க்கையில் போட்டிகள் இருக்க வேண்டும். ஆனால் போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றவர்களோடு போட்டி போடாமல் தங்களோடு தாங்களே போட்டி போட வேண்டும். ஒருவரின் திறன்களைப் பாதிக்கும் அளவுக்கு அழுத்தம் இருக்கக்கூடாது. மாறாக எந்தவொரு செயல்முறையிலும் படிப்படியான வளர்ச்சி இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் வேலையை வெறும் வேலையாக எடுத்துக்கொள்ளாமல், மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.