எங்களுக்கு பணம் வருது.. மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக திரண்ட மக்கள்! கோவையில் பரபரப்பு!

கோவை: ஆன்லைன்ச் செயலி எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக கோவையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஸ்மார்ட் போன் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ள சூழலில் யூடியூப் வீடியோவை பார்த்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. எனவே, கவனமாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், இதுபோன்ற மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கோவையில் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் டெபாசிட் பெற்று மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

கோவை நீலாம்பூர் எல்.என்.டி பைபாஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகளில் வந்து மக்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வருவாய் வழங்கும் ஆன்லைன் செயலிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புகார்தாரர் அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், விளம்பரம் பார்த்தால் பணம் தருகிறோம் என மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அழைக்கிறார்கள். ஆனால், மக்களிடம் 1 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு சித்த மருத்துவ பொருட்களை தருவதாக அரசிடம் கூறுகிறார்கள். இதுபோல மோசடி செய்து பல லட்சக்கணக்கான மக்களிடம் பணத்தைப் பெற்றுள்ளனர்.

சில ஆயிரங்களை டெபாசிட் செய்தால், ரூ.200 அக்கவுண்டில் வரும் என்றும், 1 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் அதற்கேற்ப ஆயிரங்களில் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துகொண்டே இருக்கும் எனக் கூறி, மக்களிடம் டெபாசிட் பணத்தை வாங்குகின்றனர். இதுபோல மோசடி செய்து லட்சக்கணக்கானோரிடம் பணத்தை வசூல் செய்து ஏமாற்றியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான், போலீசார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, கோவை எல்.என்.ஜி பைபாஸ் பகுதியில், My V3 Ads நிறுவனத்துக்கு ஆதரவாக மக்கள் திரண்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவை எல்.என்.டி பைபாஸ் பகுதியில் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *