‘ஆகாயத்தில் ஆச்சர்யம்’ விமானத்தில் டென்னிஸ் பிரபலம் ஜோகோவிச்சுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், விமானத்தில் வைத்து பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துள்ளார்.
இது குறித்த புகைப்படத்தையும் தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் அதிகம் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கும் போதிலும், பல கூடுதல் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இம்மாத தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
அதில் பல லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தான் தொழில் முதலீடுகளை ஈர்க்க அடுத்தகட்ட நடவடிக்கையாக வெளிநாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று முன் தினம் ஸ்பெயின் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்.. பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறேன்.. ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளேன்.. ஸ்பெயின் நாட்டின் தொழில் முனைவோர் இதில் கலந்து கொள்கின்றனர்.. இந்தியாவில் முதலீடு செய்யச் சிறந்த மாநிலம் தமிழகம் என்பதை எடுத்துரைக்க உள்ளேன்..
இந்த பயணம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன். எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பதை அங்குச் சென்று வந்த பிறகு எடுத்துரைக்கிறேன்” என்றார். இந்த நிலையில், ஸ்பெயினுக்கு விமானத்தில் செல்லும் போது பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்துள்ளார். ஜோகோவிச்சுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
டென்னிஸ் பிரபலம் ஜோகோவிச்சுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அந்த படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ஆகாயத்தில் ஆச்சர்யம் என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.