நிஜமாகின்றது நிழல்.. “இவர்”தான் பிரதமர் வேட்பாளரா? அப்ப மோடி? விருதுநகரில் “புயல்” மையம்.. பலே பாஜக
சென்னை: தமிழக தொகுதிகளில் பாஜகவின் குறி அழுத்தமாக விழுந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.
கடந்த வருடம் ஜுன் மாதம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார்.. அப்போது, “தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும்.. ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும்” என்று அழுத்தமாக வலியுறுத்திவிட்டு சென்றார்.
அதுமட்டுமல்ல, “தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு 2 முறை வந்தது. அதனை கெடுத்தது திமுகதான்.. ஆனால், தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை பாஜக உருவாக்கும்” என்றும் கூறியிருந்தார் அமித்ஷா.
ராஜதந்திரம்: அமித்ஷாவின் இந்த ராஜதந்திர பேச்சுக்கள், முழுக்க முழுக்க தேசிய அரசியலை மையப்படுத்தியும், எதிர்க்கட்சிகளுக்கு கலக்கத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணக்கூடிய வகையிலும் இருந்ததாக அப்போது கருதப்பட்டன. மேலும், இதுகுறித்த பலத்த விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வெடித்தன.
ஆனால், அமித்ஷா சொன்னதுபோல, தமிழகத்துக்கு 2 முறை பிரதமர் வாய்ப்பு வரவில்லை.. மொத்தம் 4 முறை வந்துள்ளது என்பதே உண்மை.. இதில் காமராஜருக்கு மட்டும் 3 முறை, பிரதமர் சான்ஸ் வந்திருக்கிறது.. மூப்பனாருக்கும் பிரதமர் பதவி தேடி வந்தது.. ஆனால், மூத்த தலைவர்கள் காமராஜரும் சரி, மூப்பனாரும் சரி, பிரதமர் பதவியை துளியும் விரும்பவில்லை. காமராஜருக்கு வாய்ப்பு வந்தபோது அதனை தடுப்பதற்கான வலிமை திமுகவிடம் அப்போது இல்லை என்பதே உண்மை..
மூப்பனார்: அதேபோல மூப்பனாருக்கு வாய்ப்பு வந்தபோது, கலைஞர் அதை விரும்பவில்லை என்றும், மூப்பனாரே வேண்டாம் என மறுத்தார் என்றும் இரு வேறு செய்திகளும் உண்டு. அதனால், இந்த விஷயத்தில் திமுக மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வேறு விஷயம்..
இருந்தாலும், அமித்ஷா அன்று சொன்ன வார்த்தைகள் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. எதற்காக அமித்ஷா அப்படி சொல்ல வேண்டும் ? அமித்ஷா சொல்லும் அந்த பிரதமர் வேட்பாளர் யார்? ? அப்படின்னா, இந்த முறை பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையா? என்றெல்லாம் சந்தேகங்கள் வட்டமடித்தன.
அதுமட்டுமல்ல, அமித்ஷாவின் பேச்சுகுறித்து, நாம் சிலரிடம் விசாரித்தோம்.. அப்போது பல தகவல்கள் நமக்கு கிடைத்தன.. அதாவது, தென்சென்னையில் பிரதமர் மோடி அல்லது கவர்னர் தமிழிசை களமிறங்க வைக்க பாஜக பிளான் செய்கிறதாம்..
தென்னிந்தியா: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், தமிழகத்தில் பாஜக சில இடங்களை கைப்பற்ற முடியும் என்றும், போட்டியிடுவதால் தென்னிந்தியாவில் பாஜகவின் பலம் தேர்தலில் அதிகரிக்கும் என்றும் கூட்டிக்கழித்து கணக்குப் போடுகிறார்களாம். அதனால் தென்சென்னையில் மோடியே நேரடியாக களமிறங்குவார் என்கிறார்கள்.