பிப்.1 இடைக்கால பட்ஜெட்! நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுக்கு முன்னர் பாரம்பரியமாக செய்யப்படும் “அல்வா” சமைத்தல் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், பட்ஜெட்டின் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாளை (ஜனவரி 30ஆம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஏப்ரல்-மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, மத்திய பாஜக அரசின் கடைசி கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடங்கி பிப். 9ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற இடைக்கால மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.