வாழைப்பழம் காமெடி: அதுதாண்ணே இது… செந்தில் ஏன் அப்படி பதில் சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாக்களில் கோலோச்சிய என்.எஸ் கிருஷ்ணன், கே.ஏ தங்கவேலு, டி.எஸ் பாலையா, சந்திரபாபு, நாகேஷ் என முந்தைய நடிகர்கள் வாய்மொழி மூலமாகவும், மிகைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகள் (gesticulation) மூலமாகவும் நகைச்சுவை காட்சிகளை வடித்தனர்.
1970-80களில் தமிழ் சினிமா மிகவும் இக்கட்டான காலங்களில் இருந்தாக எண்ணலாம். எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு உச்ச பட்ச நட்சத்திரம் உருவாகாத காலம் அது. கதாநாயகனின் ஆதிக்கத்தை திரையில் நிலை நிறுத்தப்பட முடியவில்லை. அப்போது, வந்த பெரும்பாலான திரைப்படங்களில் கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் உணர்வு குறைபாடுள்ள, உடல் வலிமையற்றவர்களாகவே இருந்தனர். உதாரணமாக, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ஒரு கை ஓசை, பூட்டாத பூட்டுகள் போன்ற திரைப்படங்களை கூறலாம்.
இந்த கால கட்டத்தில் வந்த கவுண்டமணி -செந்தில் காமெடி காட்சிகளிலும் இந்த போக்கு காணப்பட்டது.
பெரும்பாலும், இவர்களது காமெடி காட்சிகளில், கவுண்டமணி ஒடுக்கும் தன்மை கொண்டவராகவும், செந்தில் ஒடுங்கி போகும் தன்மை கொண்டவராகவும் வருவது வழக்கம். குறிப்பாக , செந்தில் கதாபாத்திரத்துக்கு ஆக்கத் திறமையோ, ஆளுமைத் திறமையோ இல்லாத ஒரு சராசரிக்கும் கீழுள்ள மனிதராகவே காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.
கூலி திரைப்படத்தில் மூன்று தலைமுறைகளாக செந்திலின் குடும்பம் சம்பளம் பெறாமல் கவுண்டமணியிடம் பணி செய்து வருவதாக காட்சி படுத்தப்பட்டிருக்கும். செந்தில் கதாபாத்திரித்தின் இந்த தொடர் அடிமைத்தனம் தான் நகைச்சுவையாக பார்க்கப்படும்.
கவுண்டமணி/ செந்தில் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் எதிர் அடையாளங்களின் இயக்கமாகும். உயர்வு/தாழ்வு, வன்முறை/மென்முறை, அழகு/ அசிங்கம்,அறிவாளி/ முட்டாள், உயர்ந்த சாதி/தாழ்த்தப்பட்ட சாதி, பாட்டாளி/முதலாளி, ஆண்மையவாதம்/ பெண்மையவாதம், நகரம் /கிராமம், தேசிய மொழி/உள்ளூர் வட்டார வழக்கு போன்ற பல்வேறு எதிர் அடையாளங்கள் இவர்களின் மூலம் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
ஒடுக்குபவன்/ஒடுக்கப்பட்டவர் என்ற இரண்டு எதிர் அடையாளங்கள் வாயிலாக கவுண்டமணி/செந்தில் நகைச்சுவை அசைவுகளை புரிந்து கொள்ள முடியும்.
பிரபல வாழைப்பழம் காமெடியில் ‘அந்த ஒரு பழம் தானே இது’ என்று புரியாத நிலையில் உரையாடலை கொண்டு சென்றிடுவார். அதாவது, உரையாடலை புரியாத நிலைக்கு கொண்டு செல்வதன் மூலமாக மட்டுமே செந்தில் தன்னை ஒடுக்க நினைப்பவரிடம் இருந்து விடுதலை பெற முடிந்தது
இந்த காட்சியில் தர்க்கவிவாத அறிவை அடிப்படையாக கொண்டு நாம் ஆராய முடியாது. செந்திலை கேள்வி கேட்டு தண்டிக்கும் அனைத்து நியாயங்களும் கவுண்டமணிக்கு உள்ளது. இருப்பினும், செந்திலின் செயல்பாடுகள் ஆதிக்கத்தின் குரல்களை மறுக்கவும், தீர்க்கவும், களவாடி தமதாக்கவும் செய்கிற முயற்சி…. ஒருவகையில் பார்த்தால், காரககாட்டக்காரன் படத்தின் வாழைப்பழ காட்சி தமிழ் சினிமாவில் பதிவு செய்யப்பட்ட மாபெரும் எதிர்ப்புக்குரல் ஆகும்.
ஆனால், வடிவேலுவின் காமெடியில் அந்த உரையாடலுக்கு கூட சாத்தியம் இல்லை (உதாரணமாக, எதுக்குயா அடிக்கிறீங்க! காரணம் செல்லுங்க காமெடி) வடிவேலு, ஒட்டுமொத்த சமூக அடக்குமுறைகளையும் எந்தவித எதிர்ப்பில்லாமல், உரையாடல் இல்லாமல் உள்வாங்கி கொண்டார். அந்த வலியும், அவமானமும் தான் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிக்குறியதாக மாறியது.