மேனுவல் காரை ஒருத்தரும் வாங்க போறது இல்ல!! சிட்ரோனின் புது ஆட்டோமேட்டிக் கார் – டிரைவிங் ரொம்ப சாஃப்டா இருக்கு
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross), இந்தியாவில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார். பிரெஞ்சு ஸ்டைல் எஸ்யூவி காரான சி3 ஏர்கிராஸ் அதன் கவர்ச்சிக்கரமான தோற்றத்தினால் இந்திய கஸ்டமர்களை கவர்ந்து வருகிறது. அதேநேரம், இந்த சிட்ரோன் காரில் சவுகரியமான பயணத்திற்கும் எந்தவொரு குறைச்சலும் இல்லை.
அதுமட்டுமின்றி, சி3 ஏர்கிராஸில் டர்போ பெட்ரோல் என்ஜின் என்ற ஆற்றல்மிக்க என்ஜின் ஆப்ஷன் கிடைக்கிறது. 2023 ஆகஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போது, சி3 ஏர்கிராஸ் காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த நிலையில், புதியதாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை சி3 ஏர்கிராஸ் காருக்கு சிட்ரோன் வழங்கியுள்ளது.
அதாவது, இனி மேனுவல் ஆப்ஷனில் மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் சி3 ஏர்கிராஸ் கிடைக்கும். மேனுவல் ஆப்ஷனில் சி3 ஏர்கிராஸ் ஓட்டுவதற்கு எவ்வாறு உள்ளது என்பதை ஏற்கனவே ரிவியூவாக வழங்கியுள்ளோம். இந்த நிலையில் தற்போது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் சி3 ஏர்கிராஸ் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்துள்ளது. அதன் மூலம் நாங்கள் பெற்ற அனுபவங்களை ரிவியூவாக வழங்கியுள்ளோம். அவற்றை இனி பார்க்கலாம்.
புதிய அப்டேட்கள்: சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இத்தனைக்கும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார் என்பதை தெரிவிக்கும் வகையில் ஆட்டோமேட்டிக் முத்திரை கூட காரை சுற்றி எங்கேயும் இல்லை. இதனால், மேனுவல் ஆப்ஷனில் எப்படி கிடைத்துவந்ததோ அவ்வாறான தோற்றத்திலேயே ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் சி3 ஏர்கிராஸ் கிடைக்கும்.
புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாற்றம் என்னவென்றால், புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும். இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சிஸ்டத்தை ஜப்பானை சேர்ந்த கார் டிரான்ஸ்மிஷன்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த ஐசின் வடிவமைத்துக் கொடுத்துள்ளது. புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸினால் சி3 ஏர்கிராஸ் காரில் கூடுதல் டார்க் திறனை பெற முடியும் என சிட்ரோன் தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 205 என்எம் வரையிலான டார்க் திறனை காருக்கு வழங்குமாம். இது, மேனுவல் சி3 ஏர்கிராஸில் கிடைப்பதை விட 15 என்எம் அதிகமாகும். ஆனால், என்ஜின் வெளிப்படுத்தும் குதிரையாற்றலில் எந்த மாற்றமும் இல்லை (108.4 பிஎச்பி). புதிய கியர்பாக்ஸினால் காரின் எடை 34 கிலோ அதிகரித்துள்ளது.
டிரைவிங் அனுபவம்: மேனுவல் காரை காட்டிலும் எடை மிக்கதாக இருப்பினும், புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரின் டிரைவிங் திறனில் கூடுதல் எடை எந்த விதத்திலும் இடையூறாக இல்லை. காரின் என்ஜின் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும் அசத்தலான செயல்படுதிறனை வழங்கியது. டர்போ என்ஜின் என்பதால், மிட்-ரேஞ்ச் மற்றும் டாப்-ரேஞ்ச் வேகத்தில் சிறப்பான பவர் அவுட்-புட் கிடைத்தது.
இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளுக்கும் புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் கார் ஏற்றதாக இருக்கும். இருப்பினும், கியர்களை மேனுவலாக கியர் லிவரின் மூலம் மட்டுமே மாற்ற முடிகிறது. இது, சற்று குறையாக உள்ளது. ஆதலால், சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரில் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் பெடில் ஷிஃப்டர்களை சிட்ரோன் வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது எங்களது பரிந்துரை.