மீன்பாடி வண்டிக்கு ரீ-பிளேஸ் இதுதான்! பாக்கதான் ஆட்டோ.. ஆனா நெஜத்துல இது ஒரு சைக்கிள்!
சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்திற்கு சொந்தமான சர்ஜ் (Surge) நிறுவனம் மெய்டென் எஸ்32 (Maiden S32) எனும் வாகனத்தை வெளியீடு செய்தது. இது ஓர் 2 இன் 1 பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த ஒற்றை வாகனத்தை ஆட்டோரிக்ஷா அல்லது ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியாவில் இத்தகைய வாகனம் வெளியீடு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், பலரின் கவனத்தை இந்த வாகனம் மிகப் பெரிய அளவில் ஈர்த்திருக்கின்றது. இந்த நிலையிலேயே, ஒட்டுமொத்த வாகன உலகையும் வியக்க செய்யும் வகையில் ஓர் விநோத வாகனம் தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
இதுவும் ஓர் கார்கோ பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனம் ஆகும். அதேவேளையில், பார்க்கதான் இது கார்கோ வாகனம். ஆனால், அசலில் அது ஓர் மிதிவண்டி ஆகும். மின்சாரத்தில் இயங்கும் பெடல் அசிஸ்ட் வசதிக் கொண்ட சைக்கிள் வகை கார்கோ வாகனம் ஆகும்.
நம்ம ஊரில் மீன்பாடி வண்டி என்று சொல்வோம் அல்லவா அந்த மாதிரியான ஓர் வாகனத்தையே கார்கோவாக அப்கிரேட் செய்ததைபோல ஓர் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இஏவி எனும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமே அந்த விநோத வாகனத்தை வடிவமைத்து இருக்கின்றது. அதற்கு 2க்யூப்டு என்கிற பெயரை அது சூட்டு இருக்கின்றது.
இது மீன்பாடி வண்டியைவிட அதிக லோடுகளை ஏற்றிச் செல்ல உதவும். சொல்லபோனால் மீன்பாடி வண்டியைவிட அதிக பிரீமியம் தரமானதாகவும் அது இருக்கும். அதாவது, ஓர் மூன்று சக்கர கார்கோ ஆட்டோவைபோல இது மிகுந்த பலனை வழங்கும். குறிப்பாக, ஐசிஇ எஞ்சின் கொண்ட வாகனங்களைக் காட்டிலும் அதிக லாபத்தை இது வழங்கும்.
இதுதவிர, ஐசிஇ எஞ்சின் கொண்ட வாகனங்களைக் காட்டிலும் குறைவான மாசையே இது வெளிப்படுத்தும். மேலும், விலையிலும் ஐசிஇ வாகனங்களைவிட மிகக் குறைவான விலையையே இது கொண்டிருக்கும். கார்கோ சார்ந்து பணி புரிபவர்களுக்கு அதிக லாபத்தையும், சிறந்த இயக்க அனுபவத்தையும் வழங்கும் பொருட்டே இந்த வாகனத்தை இஏவி தயார் செய்திருக்கின்றது.
இந்த வாகனத்தில் அதிகபட்சமாக கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இது ரொம்ப அதிகம் இல்லை என்றாலும், ஓர் இ-சைக்கிள் வழக்கமாக ஏற்றிச் செல்வதைக் காட்டிலும் இது சற்று அதிகம் ஆகும். இந்த வாகனத்தில் 40 மைல்கள் (65 கிமீ) ரேஞ்ஜ் தரக் கூடிய 60 Ah பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
மோட்டாரை பொருத்த வரை 250 வாட் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த அளவு குறைவான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களை இயக்க இந்தியாவில் லைசன்ஸ், வாகனபதிவு என எதுவுமே தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தைய சூப்பரான வாகனத்தையே இஏவி இங்கிலாந்தில் அறிமுகம் செய்திருக்கின்றது.
இது இங்கிலாந்து நாட்டில் வெகு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதன் விலை அந்நாட்டு மதிப்பில் பத்தாயிரம் யூரோக்கள் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, 9 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் அது விற்பனைக்கு வரும் என தெரிகின்றது.
ஆனால், இதன் விலையை இன்னும் இஏவி இறுதி செய்யவில்லை. இதைவிட அதிகமாக அல்லது குறைவாகவும் 2க்யூப்டு எலெக்ட்ரிக் சைக்கிள் கார்கோ வாகனம் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது மலிவு விலையில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இங்கிலாந்து சந்தையை கட்டாயம் ஒரு கை பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.