இந்தியாவை விட்டு ஓடிய முதலீட்டாளர்கள், திரும்ப என்டரி.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்..!
இந்திய பங்குச்சந்தை கடந்த 23 ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் மற்றும் சீனா பங்குச்சந்தை சரிவை தடுக்க அந்நாட்டு அரசு பெரும் தொகையை அரசு நிறுவனங்கள் வாயிலாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியானதை அடுத்த சர்வதேச சந்தையில் இருந்த முதலீடுகள் சீன சந்தை பக்கமும், பிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் பக்கமும் சென்றது.
இதனால் 23 ஆம் தேதி சென்செக்ஸ் 71,423 புள்ளிகளில் இருந்து 70,370.55 புள்ளிகளுக்குச் சரிந்தது.
இந்தப் பெரும் சரிவுக்கு வங்கி பங்குகளின் வீழ்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேற முக்கியக் காரணமாக உள்ளது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று ஹெச்டிஎப்சி குறித்தும், சீன முதலீட்டு சந்தை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகி வெளிநாட்டு முதலீட்டாளர்களை மீண்டும் அழைத்துள்ளது. கடந்த வாரம் இந்திய சந்தையில் இருந்து முதலீடு வெளியேற முக்கியக் காரணம் சீன அரசு ப்ரீமியர் Li Qiang தலைமையில் நடந்த கூட்டத்தில் அந்நாட்டின் பங்குச்சந்தை சரிவை கட்டுப்படுத்த அரசு நிறுவனங்கள் வாயிலாக ஹாங்காங் சந்தையில் 2 டிரில்லியன் யுவான், சீனா பங்குச்சந்தையில் 300 பில்லியன் யுவான் தொகையை முதலீடு செய்யும் அறிவிப்பு வெளியானது. இதனால் அன்று ஒரு நாளில் மட்டும் ஹாங்காங் பங்குச்சந்தை 3 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது. இந்த நிலையில் இன்று காலை சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே குரூப் சுமார் 300 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்களை வாங்கியிருக்கும் வேளையில், இதைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் ஹாங்காங் நீதிமன்றம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டு உள்ளது.
எவர்கிராண்டே நிறுவனத்தைப் போலவே Country Garden என்ற மற்றொரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமும் தனது கடனை திருப்பிச் செலுத்துவதில் தடுமாறி வருகிறது. ஆனால் கடந்த மாதம் யுவான் மதிப்பிலான பத்திரங்களைத் திருப்பிச் செலுத்தும் எனத் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு விஷயங்களும் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைக்கும், அதன் முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து எச்டிஎஃப்சி வங்கியில் சுமார் 9.99% அளவிலான பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) விண்ணப்பித்திருந்த வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் 31 நிலவரப்படி எல்ஐசி, எச்டிஎப்சி வங்கியில் 5.19 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்தில் ரீடைல் சந்தையில் இருந்தோ அல்லது பிற முதலீட்டாளர்களிடம் இருந்தோ கூடுதலாக 4.8 சதவீத பங்குகளை வாங்கும்.
LIC உடனடியாக 4.8 சதவீத பங்குகளை வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. இவ்விரு அறிவிப்புகள் மூலம் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 840.35 புள்ளிகள் உயர்ந்து 71,541.47 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 71,647.91 புள்ளிகளை எட்டியுள்ளது.