தமிழகத்தில் மானிய விலையில் தரமான பாரத் பிராண்ட் பருப்பு வகைகள் விநியோகம்: மத்திய அரசு அறிமுகம்
சென்னை: மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்), தமிழ்நாட்டில் பாரத் பிராண்ட் பெயரில் தரமான பருப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, 50 நடமாடும் வேன்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் வாய்ந்த பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களும் இந்த விற்பனையில் கூடுதலாக சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை நிலைப்படுத்தவும், உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் அளிப்பை அதிகரிக்கவும் உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்கு ஏற்கெனவே வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நுகர்வோர்களிடம் அமோக வரவேற்பு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் பாரத் பிராண்ட் பெயரில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கியுள்ளது.