‘ஹனுமன்’ பற்ற வைத்த நெருப்பால் தகிக்கும் கர்நாடகா.. நல்லாவே குளிர்காயும் பாஜக.. 144 தடை உத்தரவு!

பெங்களூர்: ராமாயண இதிகாசத்தின் படி அனுமன் (ஹனுமன்) ராவணின் இலங்கை தேசத்துக்கு தீ வைத்தான்.. இன்று ஹனுமன் கொடியால் பற்றி எழுந்த போராட்டம் 144 தடை உத்தரவு அமல், கைது நடவடிக்கை என கர்நாடகாவை பதற வைத்துள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22-ந் தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கெரேகோடு கிராமத்தில் பாஜக ஆதரவாளர்கள் 108 அடி உயர கம்பத்தை நட்டு அதில் ஹனுமன் கொடி ஏற்ற முடிவு செய்தனர்.

இது தொடர்பாக கொரேகோடு கிராம பஞ்சாயத்திடம் அனுமதி கோரப்பட்டது. கர்நாடகாவில் அரசுக்குரிய இடத்தில் தேசிய கொடி, கர்நாடகாவின் கன்னட கொடியை தவிர வேறு எதனையும் ஏற்ற அனுமதி இல்லை என கிராம பஞ்சாயத்து மறுத்தது. இதனையும் மீறி 108 அடி உயரத்தில் ஹனுமன் கொடி ஏற்றப்பட்டது. இங்கிருந்துதான் பிரச்சனையே தொடங்கின. அரசு நிலத்தில் தடையை மீறி ஏற்றப்பட்ட ஹனுமன் கொடியை மாவட்ட நிர்வாகம் கீழே இறக்கிவிட்டு தேசிய கொடியை ஏற்றியது. இதற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் பாதிக்கப்பட்ட கெரேகோடு கிராம மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஒவ்வொரு வீட்டிலும் ஹனுமன் கொடி ஏற்றுவோம் என அறிவித்தனர். இதனால் மண்டியா மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் பாஜகவினரும் களத்தில் குதித்தனர். கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தலைவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களை நடத்திய பாஜக தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, இந்து விரோத அரசு என விமர்சிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இன்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். கெரேகோடு கிராமத்துக்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து வர தொடங்கியதால் மண்டியாவில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *