`சங்கி’ முதல் விஜய், அதிமுக வரை..!” – வானதியின் `பளிச்’ பதில்கள்!
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
ஆனால், அ.தி.மு.க யாருடன் கூட்டணியமைத்து களமிறங்குகிறது, பா.ஜ.க யாருடன் கைகோக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், ரஜினி, கமல், விஜய் ஆகியோரிடம் ஆதரவு கேட்போம் எனவும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று தெரிவித்திருக்கிறார்.
வானதி சீனிவாசன்
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தேர்தல் பணிகளை பா.ஜ.க ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஒரு கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களிடம், கட்சி மற்றும் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் கொண்டுசேர்ப்பதற்கான தொடர்பு இயக்கத்தை, பிப்ரவரியில் கட்சி தொடங்கவிருக்கிறது. மேலும், `கிராமத்துக்குச் செல்வோம்’ என்ற அடுத்த நிகழ்ச்சியையும் பிப்ரவரியில் கட்சி தொடங்கவிருக்கிறது.
இந்தியா கூட்டணியில் மிக முக்கிய தலைவராக இருந்த நிதிஷ் குமார், என்.டி.ஏ கூட்டணிக்கு வந்திருக்கிறார். 10 நாள்களுக்கு முன்பு அந்தக் கூட்டணியில் இருந்த புள்ளிகள் எல்லாம், இப்போது எப்படி பிரிந்து போகின்றன என்பதைப் பார்க்கிறோம். இந்தியா கூட்டணி என்பது அவர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. இந்தக் கூட்டணி நிலைக்காது எனக் கூறிவந்தோம். அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குறிக்கோளே, பா.ஜ.க மற்றும் மோடியை எதிர்ப்பதே தவிர மக்கள் நலன் அல்ல. மக்களின் நலனைச் சிந்திக்காத கூட்டணி இப்போது சிதறிக் கொண்டிருக்கிறது.