மத்திய பாஜக அரசு, யுஜிசி சதி.. உயர் கல்வியில் OBC, SC, ST இடஒதுக்கீடு ரத்து அபாயம்-கி.வீரமணி பகீர்!

சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி (OBC, SC, ST ) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டையே ரத்து செய்ய மத்திய பாஜக அரசும் பல்கலைக் கழக மானிய குழுவான யுஜிசி (UGC) யும் சதி செய்வதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: நமது இந்திய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள முக்கிய உரிமை – அதுவும் மக்கள் அவர்களாகவே அவர்களுக்கு அளித்துள்ள மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத உரிமை (inalienable right) சமூகநீதியாகும்.

மற்றும் பொருளாதார நீதி, அரசியல் நீதி என்பவற்றின் வரிசையில் முதல் இடம், முன்னுரிமை பெற்றுள்ள இடம் சமூகநீதி ஆகும்.

ராமர் பக்தி எனும் மயக்க மருந்து: பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற மனுதர்ம ஆட்சியில் இட ஒதுக்கீட்டை அறவே பறிக்கும் முயற்சியை பற்பல ரூபத்தில், படிப்படியாக அமல்படுத்தி உயர்ஜாதியினரான பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள முன்னேறிய வகுப்பினர் நலனைப் பாதுகாக்கும் ஆட்சியாகவே இந்த பத்தாண்டு கொடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாகவே நடை பெற்றும், மூன்றாம் முறையும் ‘இராமர் பக்தி’ என்ற மயக்க மருந்தினை – பாமர வாக்காளர்களுக்குத் தந்து, அவர்களிடம் உள்ள வாக்குகளைப் பறிக்க பக்தி என்ற பகல் வேஷம் கட்டி ஆடுகிறது!

10% இடஒதுக்கீடு: சமூகநீதிப்படி சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ள Socially and Educationally மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பழங்குடியினர், ஆதிதிராவிடர் ஆகியவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை மாற்றி, அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவதுபோல், ‘பொருளாதாரத்தில் நலிந்த’ முன்னேறிய (பார்ப் பனர் மற்றும் சிலர்) உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும், உத்தியோகங்களிலும் தனி ஒதுக்கீடு தந்து, ‘புளியேப்பக்காரர்களுக்கு’ மேலும் அஜீரணம் உண்டாகும் வண்ணம், தனியே ஒரு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நுழைத்தனர்; தங்களிடம் உள்ள புல்டோசர் மெஜாரிட்டியை பயன்படுத்தி, இரண்டு, மூன்று நாள்களிலேயே அதனை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, புயல் வேகத்தில் சட்டமாக்கியதோடு, அவசர அவசரமாக அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கினார்கள்.

யுஜிசியின் சமூக அநீதி: பச்சை சமூக அநீதி அரங்கேறியது. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் தலை மையில் உள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒன்று மட்டும் அதை அமல்படுத்தவிடாது சமூகநீதியை ஊனப்படுத் தாது தடுத்து வருகிறது! இப்போது மற்றொரு பேரிடியைத் தந்து – நோட்டம் பார்ப்பதுபோல் – பல்கலைக் கழகங்களில் – உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு – வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ள பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ள திட்டத்தில்,ஆழம் பார்க்கும் வேலை! ஓ.பி.சி. எஸ்.சி., எஸ்.டி. பிரி வினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ”தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காவிட்டால்” அந்த இடங்களை ரத்து செய்து, பொது பிரிவாக அறிவித்து, மற்ற பிரிவினரை – அதாவது உயர்ஜாதியினரை பணி நியமனம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது!

திடீர் வாபஸ்: இதற்கு உடனடியாக சுனாமிபோல எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியதைக் கண்டு, ஒன்றிய கல்வி அமைச்சகம், ‘அய்யோ, இப்படி பொதுத் தேர்தல் சமயத்தில், இந்தப் பூனைக்குட்டியை வெளியே விட்டு விட்டதே – இந்த யு.ஜி.சி.மூலம் நாம் இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு முக்கியக் கல்லாகப் பிடுங்கி எடுத்து, கட்டடத்தையே வீழ்த்திட போட்ட ரகசியத் திட்டம் வெளியாகிவிட்டதே’ என்று புரிந்து, உடனடியாக இந்த அறிவிப்பு ‘வாபஸ்’ வாங்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளது! இதைக் கண்டு சமூகநீதிக்கான பல கட்சி, பல பிரிவு போராளிகளும்கூட உடனடியாக வந்த ஆபத்து நீங்கிவிட்டது என்று கருதி, முழுமையான புரிதலோடு இந்த ”ஆர்.எஸ்.எஸ். க(ஆ)ட்சியின் வித்தை”களைப் புரியாதவர்கள் நினைக்கக் கூடும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *