திருப்பரங்குன்றம் மாமியார்.. எப்பவும் மருமகளுக்கு அதே நினைப்பு.. படக்னு தோன்றிய அந்த உருவம்.. பாவம்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குபேந்திரன்.. இவரது மனைவி ஆனந்தி.. 26 வயதாகிறது.. இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகின்றன.. இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்..
குபேந்திரன்: ஆனால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நிறைய தகராறும், சண்டைகளும் வெடித்து வந்துள்ளன. இதனால், நொந்து போன குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார்.
குபேந்திரன் மனைவியை விட்டு பிரிந்துசென்றாலும், ஆனந்தியும், மாமியார் இருளாயியும் அன்பாக இருந்தனர்.. மாமியாருக்கு மருமகள் ஆனந்தி மீது கொள்ளை பிரியம்.. தன்னுடைய அம்மா, மனைவியுடன் பாசமாக பழகிவருவதால், குபேந்திரன் அதை தடுக்கவில்லை. எனவே, மாமியார், மருமகள் இருவருமே ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.
மாமியார்: இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் மாமியார் இருளாயி இறந்துவிட்டார்.. இதனால், மருமகள் ஆனந்தி அதிர்ந்து போனார்.. மாமியாரின் நினைவுகளிலேயே மூழ்கி கிடந்தார்..
பாசமாக இருந்த தன்னுடைய மாமியார் கனவில் அடிக்கடி வருவதாக, அக்கம்பக்கத்தினரிடம் புலம்பினார் ஆனந்தி.. ஒருகட்டத்தில், மாமியார், நேரடியாகவே தன் முன்பு தோன்றி அழைப்பதாக புலம்பினார்.. இதனால் அக்கம்பக்கத்தினர், ஆனந்தியை அங்குள்ள கோயில்களுக்கு அழைத்து சென்று தண்ணீர் தெளித்தனர்… சுற்றுவட்டார சாமியார்கள், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்று மந்திரித்தும் வந்தனர்.
பரிதாபம்: இந்த நிலையில், வீட்டில் தனியாக ஆனந்தி இருந்தபோது மாமியார் நினைப்பு வாட்டியது.. எனவே, வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து திடீரென தன்னுடைய உடம்பில் ஊற்றிக்கொண்டார்.. பிறகு, மாமியாரிடம் செல்வதாக சொல்லி, தனக்கு தானே நெருப்பையும் வைத்துக் கொண்டார். இதில் அடுத்த செகண்டே, உடம்பெல்லாம் கருகி அலறினார்..
பின்னர், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பரங்குன்றம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், உடம்பெல்லாம் நிறைய வெந்துபோய்விட்டது. அதனால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் ஆனந்தியை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை: ஆனந்தியின் அப்பா, முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தியின் மரணத்துக்கான காரணத்தை விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.