`இலையா… மலரா…’ – தேமுதிக எந்தப் பக்கம்?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் பல கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என வேகமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்த துக்கத்திலிருக்கும் தேமுதிக, நாடாளுமன்றத் தேர்தலில் என்ன செய்யவிருக்கிறது என விசாரித்தோம்.
“தே.மு.தி.க-வின் ஒட்டுமொத்த அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். பொதுச்செயலாளராகப் பதவியேற்று பிரேமலதா சந்திக்கும் முதல் தேர்தல் களம் இது. குறிப்பாக விஜயகாந்த் மறைந்து இறுதிச்சடங்குகள் முடிந்த கணமே, `விஜயகாந்த்தின் கனவை நினைவாக்குவோம்’ என்று சூளுரைத்த பிரேமலதாவின் அரசியல் நகர்வுகளை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் உற்று நோக்கின.
எடப்பாடி – மோடி
விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கின் சில நிகழ்வுகளில் தி.மு.க-வின் நடவடிக்கைகளின்மீது வருத்தம் தெரிவித்து தி.மு.க-வுடன் கூட்டணி போக விரும்பவில்லை என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திவிட்டார் பிரேமலதா. மறுபக்கம் திமுக தரப்பிலும் கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இவர்களுக்கு அங்கும் வாய்ப்பில்லை.
விஜயகாந்த் மறைவால் தே.மு.தி.க-மீது ஏற்பட்டிருந்த அனுதாப அலை அந்தக் கட்சிக்குக் கைகொடுக்கும் என நம்பப்படுவதால் தே.மு.தி.க-வுக்காகக் கதவைத் திறந்தே வைத்திருக்கின்றன அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும்“ என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.
“ `பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துவிட்டு மெகா கூட்டணி அமைப்போம்’ எனச் சொன்ன அ.தி.மு.க., அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக, பாஜக-வைக் கழற்றிவிடுவதன் மூலம் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தங்களின் பக்கம் திரும்பும் எனவும் கணக்கு போட்டது அதிமுக. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆகவே பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க ஆகிய கட்சிகளை எப்படியாவது இணைத்துவிட வேண்டும் எனத் திட்டமிடுகிறது அ.தி.மு.க.
தேர்தலுக்காக எடப்பாடி நியமித்திருக்கும் குழுவில் இவை விவாதிக்கப்பட்டிருக்கின்றன. மறுபக்கம், விஜயகாந்த்துடனான நினைவுகளை மையப்படுத்தி பிரதமர் மோடி எழுதியிருந்த கட்டுரை, தே.மு.தி.க-வை பா.ஜ.க-வுக்கு அருகே நெருங்கவைத்திருக்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.