பல் குத்தும் குச்சியை சாப்பிடும் தென் கொரிய மக்கள்: அரசு விடுத்த கடும் எச்சரிக்கை
தென் கொரியாவில் பல் குத்தும் குச்சியை மக்கள் வறுத்து சாப்பிடுவது பிரபலமடைந்து வரும் நிலையில், அதை சாப்பிடாதீர்கள் என்று அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையுமா சாப்பிடுவார்கள்?
நாம் யாராவது பல் குத்தும் குச்சியை சாப்பிடுவோமா? ஆனால் தென் கொரியாவில் மக்கள் பல்குத்த உதவும் குச்சியை வறுத்து சாப்பிட தொடங்கியுள்ளனர்.
தென் கொரியாவில் தற்போது சமூக ஊடகங்கள் வழியாக புதிய உணவு ஒன்று பிரபலமடைந்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் YouTube, Instagram, மற்றும் TikTok ஆகிய பல சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
அதில், பல்குத்த உதவும் குச்சியை நன்றாக வறுத்து அவை சுருண்டு பொரிந்து வரும் வரை சமைத்து அதன் மீது பொடியாக்கப்பட்ட சீஸ் மற்றும் இதர மசாலாக்கள் தூவி சாப்பிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அரசு எச்சரிக்கை
இந்நிலையில் தென் கொரியா அரசின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பல்குத்த குச்சி சாப்பிடுவதற்கான பொருள் அல்ல, தயவு செய்து இதை சாப்பிடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியாவில் பயன்படுத்தப்படும் பல்குச்சியானது சோள மாவு அல்லது சர்க்கரை வள்ளி கிழங்கு கலந்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.