அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ள மஹிந்திராவின் 5-டோர் தார் மாடல்!
பிரபல உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் தனது XUV400 Pro என்ற புதிய எலெக்ட்ரிக் SUV-யை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் இந்த புதிய ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கார்களில் ஒன்றாக இருக்கும் மஹிந்திரா தார் 5-டோர் (Mahindra Thar 5-door) மாடலை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு மஹிந்திரா நிறுவனம் கொண்டு வர உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபல ஆஃப்-ரோடு எஸ்யூவி-யாக இருக்கும் மஹிந்திரா தார் காரின் 5 கதவுகள் கொண்ட மாடல் வரும் பிப்ரவரி மாதம் (2024) இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தார் 3-டோர் மாடல் நிறுவனத்தின் பிளாக்பஸ்ட்டராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் வரவிருக்கும் Thar-ன் புதிய 5-டோர் வெர்ஷன் இந்த காருக்கான ரசிகர் பட்டாளத்தை இன்னும் அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கைகளின்படி 4 மீட்டர் நீளம் கொண்ட 3-டோர் தாருடன் ஒப்பிடும் போது, வரவிருக்கும் 5 டோர் வெர்ஷன் 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் இருக்கும்.
தார் 5-டோர் மாடலின் விலை ரூ.14 லட்சத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக புதிய தார் 5-டோர் டேஷ்போர்டின் ஸ்பை ஷாட்டானது பிரவுன் இன்டீரியர் தீம் கொண்டதாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது. இதனிடையே இந்த புதிய மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் கட்அவுட் பெரியதாக இருக்க கூடும் என தெரிகிறது .மஹிந்திரா தார் 5-டோர் ஸ்டாண்டர்ட் எஸ்யூவி-யை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கும்.
ஸ்பை ஷாட்டில் வெளியான ஃபோட்டோக்களின்படி வரவிருக்கும் 5-டோர் மாடலில் ரீடிசைன்ட் ஃப்ரன்ட் கிரில், புதிய ஃப்ரன்ட் மற்றும் பரியர் பம்ப்பர்ஸ், புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் அப்டேட்டட் எல்இடி டெயில்லைட்ஸ் போன்ற சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள் இருக்கும். மேலும் இதில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் அம்சம் சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல 3-டோர் 4WD தார் மற்றும் 5-டோர் வேரியன்ட்ஸ்கள் ஒரே மாதிரியான 2.0-லிட்டர் mStallion டர்போசார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் mHawk டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
மஹிந்திரா நிறுவனம் தார் 5-டோரில் 4×4 டிரைவ் டிரெய்னை ஸ்டாண்டர்டாக வழங்க வாய்ப்புள்ளது, ஆனால் குறைந்த வேரியன்ட்ஸ்களில் தார் 3-டோரைப் போலவே ரியர் வீல் டிரைவ் (RWD) வேரியன்ட் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும். மஹிந்திரா நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை லேடர் ஃபிரேம் சேஸுக்கு அடித்தளமாகச் இருக்கும் தார், அதன் 5-டோர் மாடலில் லேடர் பிரேம் சேஸிஸ் ஆஃப்-ரோடராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி சுசு கி ஜிம்னியின் 5-டோர் வெர்ஷன்களுக்கு வரவிருக்கும் இந்த 5 டோர் மஹிந்திரா தார் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.