உங்களுக்கு ஒரு கேள்வி: 11 வயதில் ஐபோன் 15 கேட்டு அடம்பிடிக்கும் மகள்… உங்களுடைய பதில் என்ன?
எனக்கு 11 வயது மகள் இருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுக்கு என்னுடைய பழைய ஐபோன் 8 போனை கொடுத்தேன். பெரும்பாலும் அவள் தன்னுடைய நண்பர்களுக்கு மெசேஜ் செய்வதற்கும் அவர்களோடு பேசுவதற்கும் சோசியல் மீடியா பயன்படுத்துவதற்கு மட்டுமே போன் உபயோகப்படுத்துவாள். இந்நிலையில், என்னுடைய நண்பர்கள் அனைவரும் புதிய போன் வைத்துள்ளார்கள். அதனால் எனக்கும் புதிய ஐபோன் வாங்கித் தருமாறு கூறினாள். உடனே நானும், 600 டாலர் விலையுள்ள ஐபோன் 13 மாடல் அவளுக்கு சரியாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவளுக்கோ ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் தான் வேண்டுமாம். ஏனென்றால் அதில்தான் கன்சோல் கேம் விளையாட முடியும். அதோடு அதில் 120hz டிஸ்பிளே வசதி உள்ளது என அவர் Reddit தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் தன்னுடைய பதிவில், தன் மகள் கேம் ப்ரியர் என்றும் அவளுடைய போனில் ஒழுங்காக கேம் விளையாட முடியவில்லை என்றும் அடிக்கடி குறை சொல்கிறாள். இவ்வுளவு தொகை கொடுத்து அந்த போன் வாங்க வேண்டுமா எனக் கூறி நான் மறுத்துவிட்டேன். இப்போது அவள் என் மீது மிகுந்த கோபமாக இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கையையே நான் சீரழித்துவிட்டேனாம். ஏனென்றால் அவளுடைய நண்பர்கள் எல்லாரிடமும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் உள்ளதாம். இப்போது என் மனைவி அந்தப் போனை வாங்கிக் கொடுக்கும் முடிவில் இருக்கிறாள் என வருத்தத்தோடு கூறுகிறார்.
சில நாட்களுக்கு முன் இந்தப் பதிவு Reddit தளத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். ஒரு சிலர் அந்தச் சிறுமிக்கு பெற்றோர்கள் புதிய ஐபோன் 15 வாங்கிக் கொடுக்க கூடாது என்றும் இன்னும் சிலரோ எப்படி 11 வயது மகளை சோசியல் மீடியா பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் என்றும் தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.
அவளுடைய நண்பர்களிடம் நல்ல போன் இருந்தால், இவளும் அதே போனை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடையே உள்ள வருமான வித்தியாசத்தை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். விலையுயர்ந்த பொருட்களை நம் பெற்றோரால் வாங்க முடியாது என எனது 6 வயது மகளால் புரிந்துகொள்ள முடிந்தால், நிச்சியம் உங்கள் 11 வயது மகளும் புரிந்துகொள்வாள். நல்லதே நடக்கட்டும் என ஒரு பயனாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவளுக்கு 11 வயதுதான். முடியாது என்று சொல்லுங்கள் என்று ஒருவரும், ப்ரோ, எனக்கு 17 வயது ஆகிறது. இன்றுவரை எனக்கு என் பெற்றோரக்ள் போன் வாங்கி தரவில்லை. நீங்கள் தான் பெற்றோரே தவிர அவள் அல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என இன்னொருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
என்னது 11 வயதில் சோசியல் மீடியா பயன்படுத்துகிறாளா? அவளோடு விவாதம் செய்ய அவள் இன்னும் பெரியவள் ஆகவில்லை. அவளுடைய சொந்த காசில் அவளுக்கு விருப்பமான போனை வாங்கிக் கொள்ளுமாறு கூறுங்கள் என்று பலரும் இங்க்தப் பதிவை எழுதியவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். இதில், வாசகர்களாகிய உங்களது கருத்துக்கள் என்ன… இப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் எப்படி எதிர் கொள்வீராகள்… உங்கள் மகளுக்கு என்ன பதில் அளிப்பீர்கள்?…