விமான பயணிக்கு திடீர் மூச்சு திணறல் – ஆப்பிள் வாட்ச் மூலம் பரிசோதித்து துரிதமாக காப்பாற்றிய மருத்துவர்!
சில ஆண்டுகளுக்கு முன் வரை நேரம் பார்த்துக் கொள்வதற்கான சிறு கருவியாக மட்டுமே வாட்ச் இருந்து வந்தது. ஆனால் ஸ்மார்ட் வாட்ச் என்ற தொழில்நுட்பம் களமிறங்கிய பிறகு நேரம் பார்ப்பதை கடந்து, ஃபோன் அழைப்புகளை பேசுவது, மெசேஜ் பார்ப்பது, நம் உடல்நிலை குறித்த அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்வது என்ற மேம்பட்ட வசதிகளை நாம் பெற்று வருகிறோம்.
அதிலும் ஆப்பிள் வாட்ச் போன்ற அதிநவீன அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் வாட்ச் மூலம் வெவ்வேறு தருணங்களில் மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அது குறித்த செய்திகள் பலமுறை வந்துள்ள போதிலும், விமான பயணத்தின் போது நடந்த நிகழ்வு ஒன்று சமீபத்திய உதாரணமாக அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 9ஆம் தேதி லண்டனில் இருந்து இத்தாலி நோக்கி புறப்பட்ட விமானத்தில், 70 வயது பிரிட்டீஷ் பெண்மணிக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் அந்த பெண்மணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முன் வந்தார்.
பொதுவாக இதுபோன்று மூச்சு திணறல் ஏற்படும் சமயங்களில், நோயாளியின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது வழக்கம். நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் அதற்கான சாத்திய கூறுகள் ஏதுமில்லாத சூழ்நிலையில், நோயாளியின் கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் அதற்கு தீர்வாக அமைந்தது.
ஆம், அந்தப் பெண் அவருடைய கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, நுரையீரலில் இருந்து சிவப்பு ரத்த அணுக்கள் மூலமாக உடலின் பிறப்பகுதிகளுக்கு எவ்வளவு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது என்ற விவரம் துல்லியமாக தெரியவந்தது. மேலும், நோயாளிக்கு ஏற்கனவே இதயம் தொடர்புடைய நோய்களின் பின்னணி இருப்பதும் இதன் மூலமாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை பணியாளர்கள் மூலமாக கொண்டு வரச் செய்து, நோயாளிக்கு உயிர் மூச்சு கிடைப்பதை மருத்துவர் உறுதி செய்தார். ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்று தொடர்ந்து கண்காணித்து வந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் அந்த விமானம் இத்தாலியில் தரையிறங்கியது.
அதுவரையிலும் அந்த பெண்ணுக்கு தேவையான முதல்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவர் தான் உயிரை காப்பாற்றினார் என்றாலும் கூட, அதற்கு உறுதுணையாக அமைந்தது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடுவது என்ன.?
தங்கள் ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் உள்ள அம்சங்கள் குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயத்தில், அதனை மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவல் இடம்பெறவில்லை. சாதாரண பயன்பாடுகள் குறித்து தான் கூறியிருக்கின்றனர். அதிலும் கடைசியாக வந்த சீரிஸ் 9, அல்ட்ரா 2 ஆப்பிள் ஆகிய இரண்டு ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ஆப் நீக்கப்பட்டு இருக்கிறது.