மலேரியாவுக்கு தடுப்பூசி… கொசுவினால் பரவும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் மைல்கல்..!
மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் ரொட்டீன் தடுப்பூசி திட்டம், ஆப்பிரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாக கேமரூனில் தொடங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் 6,00,000 பேர் ஆப்பிரிக்காவில் மலேரியாவால் உயிரிழக்கின்றனர். அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு 80% உள்ளது. 2021-ம் ஆண்டில், உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95%, மற்றும் மலேரியா பாதித்து உயிரிழந்தவர்களில் 96% ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
மலேரியா தடுப்பு மருந்து
இதைத் தடுக்கும் வகையில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதல் மலேரியா தடுப்பூசி வழங்கப்பட்டது.
கேமரூனில், ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக மலேரியா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு தவணைகளாக இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பிற தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.