காசாவில் போர் நிறுத்தப்படுமா..! ஒப்பந்தத்திற்கு இணங்கிய இஸ்ரேல்
ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் ஹமாஸ் படையினரிடம் மீதமுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான கட்டமைப்பிற்கு இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை சேர்ந்த பேச்சுவார்தையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கான சம்மதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் கத்தார் பிரதமர் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த உளவு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
போர் நிறுத்தம் மற்றும் அத்தியாவசிய உதவிகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துதலுக்கு மாற்றாக ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகள் விடுவிப்பை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பிணைக் கைதிகள்
இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் இன்று ஹமாஸ் படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இஸ்ரேலிய படைகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுவர் என தெரிகிறது.
இதற்கு முன் பேச்சுவார்த்தைகளின் மூலம் கடந்த ஆண்டு நவம்பரில் முன்னெடுக்கப்பட்ட போர் நடவடிக்கையில் 100 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், 240 பாலஸ்தின பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த போர் நிறுத்தம் ஒரு வாரத்திற்கு பிறகு கைவிடப்பட்டது. ஹமாஸ் படையினரிடம் தற்போது காசாவில் 100 பிணைக் கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.