இலங்கை உட்பட நான்கு ஆசிய நாடுகளுக்கான விமான சேவையை குறைத்துக் கொண்ட பிரபல நிறுவனம்
ஓமானின் தேசிய விமான சேவை நிறுவனமானது தங்களின் பொருளாதார செயல்திறனை மேம்படுத்துவதற்காக இஸ்லாமாபாத், லாகூர், கொழும்பு மற்றும் சிட்டகாங் பகுதிகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.
விமான சேவை மொத்தமாக ரத்து
ஓமன் ஏர் விமான சேவை நிறுவனமானது தங்களின் பொருளாதார செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கான அதன் சேவைகளை குறைத்துக்கொண்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக இஸ்லாமாபாத், லாகூர், கொழும்பு மற்றும் சிட்டகாங் பகுதிகளுக்கான விமான சேவைகளை மொத்தமாக ரத்து செய்துள்ளதுடன் பாகிஸ்தானின் சியால்கோட் நகருக்கான சேவையை புதிதாக இணைத்துக் கொண்டுள்ளது.
மேலும் இந்தியாவுக்கான பெரும்பாலான சேவைகளை குறைத்துக் கொண்டுள்ள நிலையில், லக்னோ மற்றும் திருவனந்தபுரம் நகரங்களுக்கான சேவையை மட்டும் அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கான விமான சேவை
கடந்த 2023 நவம்பர் மாதம் ஓமானின் சலாம் ஏர் நிறுவனம் இந்தியாவின் ஹைதராபாத், காலிகட், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் மற்றும் லக்னோ நகரங்களுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது.
ஆனால் இந்தியாவுக்கான விமான சேவை உரிமை ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்பட்டதால் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.