திமுக இளைஞரணி கோட்டாவில் எத்தனை எம்.பி.சீட்? உதயநிதி டிக் அடிக்கும் வேட்பாளர் லிஸ்ட்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணி கோட்டாவின் கீழ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிடம் பேசி எத்தனை சீட் கேட்டு வாங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருப்பது அக்கட்சியின் இளைஞரணி. ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய இருவர் வசம் இருந்த திமுக இளைஞரணி இப்போது உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது. இவர் இளைஞரணிச் செயலாளராக இருக்கும் காரணத்தால் அந்த அணியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா கட்சியினராலும் உற்று நோக்கி கவனிக்கப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலினுடன், ஜோயல், அப்துல் மாலிக், என 9 மாநில துணைச் செயலாளர்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தை சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவு செய்தனர். இத்தனை நாட்களாக சேலம் திமுக இளைஞரணி மாநாடு குறித்த பணிகளில் முழு கவனத்தை செலுத்தி வந்த உதயநிதி, இப்போது தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வரும் அவர், திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் உள்ளார்.
தமிழகம் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 இடங்களில் திமுக இளைஞரணிக்கு குறைந்தபட்சம் 5 இடங்களையாவது கேட்டு வாங்கும் முடிவில் உள்ள உதயநிதி ஸ்டாலின், சத்தமின்றி வேட்பாளர்களையும் அடையாளம் கண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தனுஷ்குமார், திருவண்ணாமலை அண்ணாதுரை, தர்மபுரி செந்தில்குமார் ஆகிய மூவரும் இளைஞரணி கோட்டாவில் தான் எம்.பி.சீட் வாங்கி டெல்லி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞரணி கோட்டாவில் மாநில அளவில் பதவியில் இருப்பவர்களுக்கு தான் எம்.பி. சீட் என்றில்லை, மாவட்ட அளவில் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களாக இருக்கும் ஆக்டிவான நபர்களுக்கு கூட ஜாக்பாட் கிடைத்தால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.