காந்தி நினைவு தினம்: டெல்லி ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
புதுடெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.30) தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர் மகாத்மா காந்தி. இவர் டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி நினைவு நாளை ஒட்டி, அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்’ பாடல் ஒலிக்கப்பட்டது.
முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘பாபுவின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், நமது தேசத்துக்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்துக்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன’ எனப் பதிவிட்டுள்ளார்.