புஸ்ஸூன்னு போச்சே “முதலாளி”.. நெல்லையில் “அந்த” குரல்.. அரண்டு போன பாஜக.. நயினார் நாகேந்திரன் அசரலையே
சென்னை: நயினார் நாகேந்திரனுக்கு இந்த முறை சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான் நெல்லையில் பரபரப்பாக நடந்து வரும் விவாதமாகும்.
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர்… அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதும் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர். உடனடியாக அவருக்கு கட்சியில் மாநிலத் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது அப்போதே அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
நெல்லை பாஜகவின் வெற்றிபெற்ற ஒரு எம்எல்ஏவாகவும் வலம் வருபவர். பாஜகவில் இரண்டாம் கட்டத் தலைவராகவும் நயினார் நாகேந்திரன் முன்னணியில் உள்ளார். பாஜக மாநில துணைத் தலைவராக மட்டுமல்ல, பாஜக சட்டமன்றக்குழு தலைவராகவும் பொறுப்பில் உள்ளார். இவ்வளவும் இருந்தும், எம்பி சீட் வேண்டும் என்ற ஆசையும் நயினாருக்கு துளிர்த்துள்ளதாக தெரிகிறது.
தலைமை: இதனால் மத்திய அமைச்சர் பதவியையும் பெற்றுவிடலாம் என்ற எண்ணமும் உள்ளதாக தெரிகிறது. எம்பி சீட் வழங்க கோரி, மேலிடத்தில் முன்வைக்கவும், தலைமையும் இதற்கு ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால், நெல்லை தொகுதியில் நயினாருக்கு சீட் தருவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நயினாருக்கு சீட் கொடுத்தால் அங்கு பாஜக படுதோல்வி அடையும் என்று பகிரங்கமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்ற திட்டத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜா என்பவர் சார்பில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டர்கள்: அதில், “புறக்கணிக்காதே..! புறக்கணிக்காதே..! வெள்ளாளர்களைப் புறக்கணிக்காதே! பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர் சமுதாயத்தை பாஜக புறக்கணிக்கிறதா? நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட்டா? வெள்ளாளர்களே விழித்து கொள். திருநெல்வேலி எம்.பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும், எச்சரிக்கிறோம்.” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள்தான் கடந்த 2 நாட்களாகவே மிகுந்த பரபரப்பை தந்து கொண்டிருக்கின்றன.. எதற்காக நயினாருககு எதிர்ப்பு கிளம்பி உள்ளது? நெல்லையில் என்னதான் நடக்கிறது?
அதிருப்தி: நெல்லையின் சிட்டிங் திமுக எம்பி ஞானதிரவியம் மீது, மக்களுக்கு அதிருப்தி இருந்துவருகிறது.. இதைதான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுமே முயல்கின்றன..
இந்த தொகுதியில், பாளையங்கோட்டை, நெல்லை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.