ஒரு மாதம் மொபைல் பயன்படுத்தாவிட்டால் ரூ.8 லட்சம் பரிசு; அருமையான போட்டி எங்கு தெரியுமா?
இன்று நம்மால் ஒரு நிமிடம் கூட மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில், ஒரு மாதம் முழுவதும் உங்களால் மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? அப்படியிருந்தால், உங்களுக்கு பணப் பரிசை அளிப்பதாக நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. அட ஆமாங்க, ஒரு மாதம் மொபைல் போனை தொடவில்லை என்றால் ரூ.8.31 லட்சம் பரிசு தருவதாக Siggi’s Dairy என்ற யோகர்ட் தயாரிக்கும் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதுமட்டுமின்றி 30 நாள் டிஜிட்டல் நச்சுநீக்க திட்டத்தில் பங்கேற்கும் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறப்பு பரிசுகளும் உள்ளது.
ஒரு மாதம் மது குடிக்கமாட்டேன் என உறுதிமொழி ஏற்பதற்குப் பதிலாக ஒரு மாதம் ஸ்மார்ட்போன் பயன்படுத்த மாட்டேன் என உறுதிமொழி எடுங்கள் என இந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மது குடிக்காமல் இருப்பதை வறட்சியான ஜனவரி என்று கூறுகிறார்கள். அந்த கருதுகோளை பின்பற்றியே இந்த திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்கு தரப்படும் பெட்டியில் அவர்களது மொபைல் போனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பதால் கிடைக்கும் பயன்களை தெரியப்படுத்துவதே இந்தப் போட்டியின் நோக்கம்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.8.31 லட்ச பரிசுத் தொகையோடு ரெட்ரோ ஃப்லிப் மாடல் போன், எம்ர்ஜென்சிக்கு அழைக்க ப்ரீபெய்ட் சிம் மற்றும் மூன்று மாதத்திற்கான யோகர்ட் தரப்படும். நம்முடைய வாழ்க்கையில் எந்தவித கவனமும் சிதறாமல், சிக்கல் இல்லாமல் இருந்தாலே நிறைய ஆற்றல் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். இன்று நம்முடைய வாழ்கையில் கவனத்தை சிதறடிப்பதில் மொபைல் போன் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அந்நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆர்வம் இருக்கும் யாரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் உங்கள் பெயர், இ-மெயில் முகவரி, நாடு, 18 வயதிற்கு மேற்பட்டவரா என்ற விவரங்களை அளித்து ஏன் உங்களுக்கு இந்த டிஜிட்டல் நச்சுநீக்க திட்டம் தேவைப்படுகிறது மற்றும் உங்கள் வாழ்க்கையில் இதனால் ஏற்படப்போகும் தாக்கம் என்ன? என்பதை விளக்கி கட்டுரை வடிவில் விண்ணப்பத்தோடு சேர்த்து சமர்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் வசிக்கும் சட்டப்பூர்வ குடிமக்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தப் போட்டியில் தாராளமாக கலந்துகொள்ளலாம். போட்டி குறித்த மேலதிக நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் Siggi நிறுவனத்தின் ரூல்புக்கில் உள்ளது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஐந்து நீதிபதிகளின் முன்னிலையில் வெற்றி பெற்ற பத்து பேரின் பெயர்கள் அறிவிக்கப்படும்.