மார்கெட் ஏற்ற இறக்கங்களுக்கு SIPஐ நிறுத்த வேண்டுமா..?
நடுத்தர வர்க்க மக்களின் மிக விருப்பமான முதலீட்டு முறையாக இருப்பது எஸ்.ஐ.பி (Systematic Investment Plan) எனப்படும் சீரான முதலீட்டு முறை தான்.
இம்முறையின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் மாதத்திற்கு ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்யமுடியும். குறைந்தபட்சமாக மாதத்திற்கு ஒருமுறை ரூ.100 கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யலாம் என்பது இத்திட்டத்தின் கவர்ச்சிகரமான வாய்ப்பு. பெரும் தொகையாக முதலீடு செய்யமுடியாத நடுத்தர வர்க்க மக்களுக்கு எஸ்.ஐ.பி ஒரு வரப்பிரசாதம்.
ELSS (Equity Linked Savings Schemes) எனப்படும் எஸ்.ஐ.பி திட்டங்களில் முதலீடு செய்யும்போது வரிச்சலுகையும் பெறலாம். கூட்டுவட்டியின் மகத்துவத்தால் அதிக ரிட்டர்ன்ஸ் கிடைப்பதோடு, வரிச்சலுகையும் கிடைப்பதால் சம்பளதாரர்கள் பலரின் விருப்பமான தேர்வாக ELSS இருக்கிறது.
முதலீடு செய்வதை நிறுத்துவது தவறு!
“நாம் மற்றவர்களை விட புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. மற்றவர்களை விட நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும்” என்ற வாரன் பபெட் பொன்மொழி எஸ்.ஐ.பி முதலீட்டு முறைக்கு மிகச்சரியாகப் பொருந்தும். எஸ்.ஐ.பி பற்றிய போதிய புரிதல் இல்லாமல், நிறைய கட்டுக்கதைகளை நம்பி இந்த முதலீட்டுமுறையில் தவறு செய்து வருவாய் இழப்பைச் சந்திப்பவர்கள் ஏராளம். அந்தக் கட்டுக்கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, `பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது நிறுத்திக்கொள்ளலாம்’ என்பது. இது மிகத்தவறான அணுகுமுறையாகும். இதே போன்று பங்குச்சந்தை இறக்கத்தின் போதும் எஸ்.ஐ.பி முறை மூலம் முதலீடு செய்வதை நிறுத்துவது தவறான அணுகுமுறையாகும்.