மத்திய பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
மத்திய அரசின் பட்ஜெட் என்றாலே மக்கள் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்குமா என்பதை தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் தற்போது தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் மட்டுமே. பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்கும் போது தான் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எனவே மத்திய பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்க வேண்டாம், என அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்து விட்டார். இருப்பினும் பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட அறிவிப்புகள் வெளியாகினால் நன்றாக இருக்கும் என்கின்றனர் மிடில் கிளாஸ் மக்கள்.
புதிய வருமான வரி தாக்கல் முறையில் மாற்றம் வருமா? புதிய வருமான வரி தாக்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள் பழைய நடைமுறையை பயன்படுத்தியே வரி தாக்கல் செய்கின்றனர். புதிய முறையில் பல்வேறு பிரிவுகள் எளிமைபடுத்தப்பட்டுள்ளன, எனவே மக்கள் அதற்கு மாற வேண்டும் என்கிறது மத்திய அரசு. ஆனால் HRA எனப்படும் ஹவுஸ் ரெண்ட் அலோவன்ஸ் மற்றும் வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டிக்கான சலுகை பெறுவது ஆகியவற்றில் சிக்கல் இருப்பதால் மக்கள் புதிய வரி தாக்கல் நடைமுறைக்கு மாறாமல் இருக்கின்றனர். இந்த இடைக்கால பட்ஜெட்டில் புதிய நடைமுறையில் இவற்றை எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியாக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். குழந்தைகளுக்கான கல்வி செலவு: பழைய வரி விதிப்பு முறையில் குழந்தைகளின் கல்விக்கான தொகை ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய் என்றும், அவர்களின் விடுதி செலவுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் என்றும் விலக்கு தரப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். ஆனால் இந்த தொகை பல ஆண்டுகளாக திருத்தப்படாமலே இருக்கிறது. விலை வாசி ஏற்றங்களுக்கு மத்தியில் , குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் விடுதி செலவுக்கான தொகையை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர் மக்கள். புதிய வரி விதிப்பு முறையில் இந்த திருத்தத்தை இணைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அறக்கட்டளை நன்கொடைக்கு சிறப்பு அறிவிப்பு? அண்மையில் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா உலக கவனத்தை ஈர்த்தது. இது சம்பந்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு பழைய முறையில் பிரிவு 80ஜியின் கீழ் விலக்கு உண்டு. இதனை புதிய வரி விதிப்பு முறையிலும் இணைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.