திருந்தாத இந்திய அணி.. உலகக்கோப்பையில் செய்த அதே தவறு.. சுட்டிக் காட்டும் விமர்சகர்கள்
முன்னாள் வீரர்கள் பலரும் அதே பலவீனம் தான் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது என கூறி வருகின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் பந்துவீச்சின் போது இங்கிலாந்து வீரர் ஆலி போப் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர் சதம் அடித்த நிலையில், அடுத்த நாள் மீண்டும் தன் ரன் குவிப்பை அவர் தொடர்ந்தார். அப்போது இந்திய வீரர்களின் உடல் மொழி மாறத் துவங்கியது.
“ஆலி போப் ஒவ்வொரு பவுண்டரி அடித்த போதும் ஒரு இந்திய வீரரின் தலை கீழே தொங்கியது” என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் நேரலையில் வர்ணனையின் போது கூறினார். உண்மையில் அது தான் களத்தில் நடந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்த போது, இந்திய பேட்ஸ்மேன்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்த அணி போலத் தான் களத்துக்கு பேட்டிங் செய்ய வந்தனர்.
ஒரு பேட்ஸ்மேன் கூட தன் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. மாறாக விக்கெட் விழாமல் ஆட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். அதனால், ரன் குவிக்காமல் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். அதை பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்ள் கடும் அழுத்தம் கொடுத்து விக்கெட்களை அள்ளினர்.