நானே என் தம்பிகிட்ட தான் அதை கத்துக்குவேன்.. முசிர் கான் பற்றி அண்ணன் சர்ப்ராஸ் பேட்டி

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த நௌசத் கான் தன்னுடைய 2 மகன்களை எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் தேவையான வசதிகளையும் ஆதரவையும் செய்து கொடுத்து வருகிறார்.
அதை பயன்படுத்தி அவருடைய முதல் மகன் சர்பராஸ் கான் கடந்த சில வருடங்களாகவே ரஞ்சி கோப்பையில் ரன்கள் மேல் ரன்கள் அடித்து இந்தியாவுக்காக விளையாடுவதற்கு தேர்வு குழுவின் கதவை தொடர்ந்து தட்டி வந்தார். அதன் பயனாக நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2வது போட்டிக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அண்ணன் தம்பி:
அதே போல நௌவ்சத் கானின் 2வது மகன் முசீர் கானும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிராக சதமடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் அந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த 3வது வீரராகவும் சாதனை படைத்து வருகிறார்.
இந்நிலையில் தம்மை விட தன்னுடைய தம்பி முஷீர் கான் சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை கொண்டிருப்பதாக சர்ப்ராஸ் கான் பாராட்டியுள்ளார். எனவே தடுமாறும் நேரங்களில் அவருடைய டெக்னிக்கை பார்த்து தாம் கற்றுக்கொண்டு வருவதாக தெரிவிக்கும் சர்பராஸ் இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அவர் என்னை விட சிறந்தவர். இதை அவர் என்னுடைய தம்பி என்பதற்காக சொல்லவில்லை. சில நேரங்களில் நான் தடுமாறுவேன்”
“அப்போதெல்லாம் அவருடைய டெக்னிக்கை பார்த்து நானும் வேலை செய்வேன். அவர் சிறப்பாக விளையாடுவது எனக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அவர் பேட்டை சுழற்றும் விதம் நன்றாக உள்ளது. எனவே நான் சிறப்பாக பேட்டிங் செய்யாத போது அவரை பார்த்து கற்றுக் கொள்வேன். நான் 300 பந்துகளை எதிர்கொண்டால் முசீர் பந்து வீச்சில் நிறைய ஓவர்களை வீசிய பின் பேட்டிங்கிலும் எனக்கு நிகராக 300 பந்துகளை எதிர்கொள்வார்”