வானத்தைப்போல படத்தையே மிஞ்சிய சர்பிராஸ் கானின் தம்பி பாசம்.. கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு
மும்பை : கனவுகளை துரத்துங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் பல வருடங்கள் முன்பு ரசிகர்களிடம் கூறினார். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் ஒற்றை இடத்தை பிடிப்பதற்காக தன்னுடைய ரத்தம், வியர்வையை சிந்தி கடுமையாக உழைத்தார் சர்பிராஸ் கான்.
கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்ற பெருமை சப்ராஸ்கானுக்கு கிடைத்திருக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சதம், இந்திய சீனியர் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் சதம் என தமக்கு கிடைக்கும் வாய்ப்பை மிகக் கச்சிதமாகவே பயன்படுத்தினார் சர்பிராஸ்கான். ஆனால் என்ன காரணத்தினாலோ, சர்பிராஸ் கானுக்கு இந்திய அணியில் இடமே கிடைக்கவில்லை.
விளையாடிய 45 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 14 சதம், 11 அரை சதம் என சர்பிராஸ்கான் 4000 ரன்களை நெருங்குகிறார். இந்த நிலையில் சர்பிராஸ்கான் கொஞ்சம் பருமனாக இருப்பதால்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் கடும் பயிற்சியை மேற்கொண்ட சர்பிராஸ் கான் ஆறு ஏழு கிலோ வரை குறைத்து அதற்கும் பதில் சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சீனியர் வீரர்கள் கே எல் ராகுல்,ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில் தான் சர்பிராஸ் கானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் சர்பிராஸ்கான் இன்று காலையில் பயிற்சியை தொடங்கி அதன் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சர்பிராஸ் கானுக்கு முசிர் கான் என்ற ஒரு சகோதரரும் இருக்கிறார். அண்டர் 19 கிரிக்கெட்டில் தற்போது முசிர் கான் விளையாடி வருகிறார். அண்மையில் அயர்லாந்துக்கு எதிரான U19 உலகக்கோப்பை போட்டியில் முசிர் கான் சதம் அடித்தார். தனது தம்பியை குறித்து பேசிய சர்பிராஸ்கான், என்னுடைய தம்பி என்னை விட சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்.
நான் என்னுடைய தம்பி என்பதால் இதை கூறவில்லை. சில சமயம் நான் பேட்டிங் செய்யும்போது தடுமாறுவேன். ஆனால் என் தம்பியின் கிரிக்கெட் யுத்தியை பார்க்கும் போதும் அவருடைய பயிற்சியை பார்க்கும் போதும் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும். களத்தில் அவர் நடந்து கொள்ளும் விதம் ரன் அடிக்கும் விதம் அனைத்துமே நன்றாக இருக்கும்.