நாடிநரம்பு எல்லாம் கிரிக்கெட்.. எனக்கா இடமில்லை.. பிசிசிஐ கதவுகளை உடைத்து எறிந்த இளம் வீரர்
மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சமீபத்தில் கே எல் ராகுலுக்கு மாற்று வீரராக இடம் பிடித்து இருக்கிறார் சர்பராஸ் கான்.
இவர் தன் 12 வயதிலேயே பெரிய கிரிக்கெட் வீரராக வரப் போகிறார் என மும்பை கிரிக்கெட் வட்டாரத்தால் பாராட்டப்பட்டவர்.
ஹாரிஸ் ஷீல்டு எனும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தன் 12வயதில் 421 பந்துகளில் 439 ரன்கள் குவித்தார். தன் 17 வயதிலேயே ஐபிஎல் அணியில் இடம் பெற்றார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர் சர்பராஸ் கான் தான். அதே போல ரஞ்சி ட்ராபி தொடரில் மிக அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ளார்.
இதற்கெல்லாம் காரணம், அவரது தந்தை நௌஷத் கான் தான். அவர் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். தற்போது அவர் கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கிறார். சர்பராஸ் கானுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தார். அதன் விளைவாகவே அவர் மிக இளம் வயதிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக மாறி இருந்தார். முதல் தர டெஸ்ட் போட்டியில் 66 இன்னிங்க்ஸ்களில் 3912 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 69.85 ஆகும்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என காத்துக் கொண்டு இருந்தார். ஆனால், அவரது உடல் எடை மற்றும் அவரது தந்தையுடன் மட்டுமே அவர் பயிற்சி செய்வார் போன்ற காரணங்களால் இந்திய அணியில் அவரை தேர்வு செய்யவில்லை.
ஆனால், தற்போது இந்திய அணியில் கே எல் ராகுல், விராட் கோலி போன்ற அனுபவ பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில், வேறு வழியின்றி உள்ளு அளவில் சிறந்த பேட்ஸ்மேன் ஆன சர்பராஸ் கானை அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது பிசிசிஐ. மிக நீண்ட காலமாக சிறப்பாக கிரிக்கெட் ஆடியும் வாய்ப்பின்றி இருந்த அவருக்கு கோலி, ராகுல் வழியாக இந்திய அணியில் கதவுகள் திறந்துள்ளன.