U19 World Cup 2024: அதிரடி காட்டிய அர்ஷின் குல்கர்னி… புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா! அட ஜெர்சி நம்பர் கூட ஒன்னா இருக்குதப்பா!

U19 உலகக் கோப்பை:

துபாயில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் இளம் வீரர்கள் பலரை ஐபிஎல் அணிகள் வாங்கின.

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அர்ஷின் குல்கர்னியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விலைக்கு வாங்கியது. 19 வயதே ஆன இளம் வீரர் என்பதால் இந்த முறை ஐபிஎல் தொடரில் இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முக்கியமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்ட்ரா அணிக்காக சிறப்பாக விளையாடியதால் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடினார். அதேபோல், பந்து வீச்சிலும் அசத்தலாக உள்ளார்.

சதம் விளாசிய அர்ஷின் குல்கர்னி:

இந்நிலையில் தான் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். அதன்படி நேற்று நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்களை குவித்தது. இதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அர்ஷின் குல்கர்னி 118 பந்துகள் களத்தில் நின்று 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை குவித்தார்.

இதனிடையே இந்திய அணிக்கு ஒரு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று பலரும் பாராட்டி வரும் சூழலில் ஹர்திக் பாண்டியா அவர் குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

பாராட்டிய ஹர்திக் பாண்டியா:

இது தொடர்பாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள பதிவில், ‘நேற்று நீங்கள் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய அற்புதமான இன்னிங்சிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய நல்ல எதிர்காலத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அதுமட்டும் இன்றி உங்களது ஜெர்சிநம்பரை அருமையாக தேர்வு செய்துள்ளீர்கள்’என்று கூறியுள்ளார்.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 33 என்ற நம்பரை கொண்ட ஜெர்சியை பயன்படுத்தி விளையாடி வரும் சூழலில் தற்போது 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்த உலகக்கோப்பை தொடரில் அர்ஷின் குல்கர்னியும் 33 என்ற நம்பரை கொண்ட ஜெர்சியில் தான் விளையாடி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *