உண்ணாவிரத போராட்டம் இருக்கட்டும்.. சைட் கேப்பில் பிரியாணியை சைலெண்டாக உள்ளே தள்ளிய போராட்டக்காரர்கள்
திருவள்ளூர்: ஒரு பக்கம் படுதீவிரமாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வந்த போதே சைட் கேப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரியாணியைச் சாப்பிட்ட குபீர் சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை அருகே நடந்த நிலையில், அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காஞ்சிப்பாடி சரவணன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம்: மத்திய அரசு சமீபத்தில் புதிதாக ஹிட் அண்ட் ரன் சட்டத்தைக் கொண்டு வந்து இருந்தது. இருப்பினும், இதற்கு வடமாநிலங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.. அதாவது இந்த புதிய சட்டத்தின் கீழ் விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சம் 7 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும்.. இருப்பினும், லாரி ஓட்டுநருக்கு இந்த தொகை அதிகம் என்று கூறி வடமாநிலங்களிலேயே லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து இந்த சட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தச் சட்டத்தை நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், திருவள்ளூரில் சவுண்டு மணல் குவாரிகளை தொடங்க வேண்டும். வாகன வரிகளைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
லஞ்ச் பிரேக்: இந்த போராட்டம் காலையில் 10 மணிக்கு ஆரம்பித்த நிலையில், முதலில் 200க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இதில் கலந்து கொண்டனர். இருப்பினும், 3 மணி நேரத்தில் மதிய உணவு நேரம் வந்த நிலையில், அனைவருக்கும் பசி வந்துவிட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக சைலெண்டாக எழுந்து சாப்பிடச் சென்றுவிட்டனர். ஒரு கட்டத்தில் மேடையில் மட்டுமே ஆட்கள் இருக்கக் கீழே இருந்த இருக்கைகள் காற்று வாங்கிக் கொண்டு இருந்தது.