மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை: எலான் மஸ்கின் அடுத்த திட்டம்
எலான் மஸ்கினால் நிறுவப்பட்ட நியூராலிங்க் நிறுவனம், முதன்முறையாக மனித மூளையில் ‘சிப்’ ஒன்றை வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இந்த புரட்சிகரமான தொழில்நுட்பத்தின் சோதனைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூராலிங்க் நிறுவனம் தயாரித்த புரட்சிகர சிப்புக்கு ‘டெலிபதி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
புதிய சோதனை
இந்த ‘சிப்’ ஆனது மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்பேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையில் மனிதனின் மூளையில் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது முதன்முறையாக மனிதனுக்கு பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது.
அத்துடன் நரம்பியல் சிதைவு, ஆட்டிசம் பாதிப்பு மற்றும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் நன்கு குணமடைந்து வருவதாகவும் சோதனையின் ஆரம்ப முடிவுகள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.