பொருளாதார வீழ்ச்சியிலும் ஜேர்மன் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மன் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், ஒரு சோதனை முயற்சியாக அந்நாட்டு ஊழியர்களின் வேலை நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகின்ற ஆறு மாதங்களுக்கு ஜேர்மன் நாட்டு ஊழியர்களின் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்களாக குறைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் போது, ஊழியர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியம் அதிகரிப்பதோடு அவர்களின் வினைத்திறனும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் கோரிக்கை
குறித்த திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என ஜேர்மன் நாட்டின் பல தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்ததோடு இந்த முடிவு சிறந்த பலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்கள் நம்புகின்றன.
மேலும், இந்தத் திட்டம் ஆரம்பகட்ட சோதனையாக மேற்கொள்ளப்படவுள்ளதால் அந்நாட்டின் 45 நிறுவனங்கள் திட்டத்தில் பங்கேற்கின்றன.
அத்துடன், டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தை கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.