ஒரு மாசம் மொபைல் யூஸ் பண்ணாம இருந்தா ரூ.8 லட்சம் பரிசு! நீங்க ரெடியா? சவால் விடும் சிக்கி!
ஒரு மாதம் மொபைல் போனையே தொடாமல் இருந்தால், அவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசாகத் தருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ரெட்ரோ ஃப்லிப் மாடல் போன் மற்றும் மூன்று சிம் கார்டுகளும் பரிசாகக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
ஒவ்வொருவரும் தினமும் மணிக்கணிக்கில் மொபைல் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஒரு மாத காலத்திற்கு செல்போனே பயன்படுத்தாமல் இருக்கும் போட்டியை அறிவித்துள்ளது அமெரிக்க நிறுவனமான சிக்கி (Siggi). டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் என்னென்ன பலன்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை உணர வைக்க இந்த போட்டியை நடத்துகிறார்களாம்.
இதில் கலந்துகொண்டால் அவர்களின் மொபைலை வைக்க ஒரு பெட்டி தரப்படும். அதற்குள் அவர்களின் மொபைல் போன் பத்திரமாக இருக்கும். 30 நாட்கள் செல்போன் இல்லாமல் தாக்குப்பிடித்துவிட்டால் 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும். அதாவது இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய்! இந்தத் தொகையுடன் ரெட்ரோ ஃப்லிப் மாடல் போன், எம்ர்ஜென்சிக்கு அழைக்க ப்ரீபெய்ட் சிம் கார்டுகள் தரப்படும்.
மொபைல் போன் பல வழிகளில் நமது கவனத்தைச் சிதற வைக்கும் என்றும் கவனம் சிதறாமல் ஒருமுகமான மனதுடன் இருக்க முடிந்தால் வாழ்க்கை சிக்கலற்றதாக இருக்கும் என்றும் சிக்கி நிறுவனம் கூறுகிறது.
இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவது ஏன் என்றும் இதன் மூலம் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றம் உண்டாகும் என்று நினைக்கிறீர்கள் என்றும் விளக்கி கட்டுரையாக எழுதி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியில் பங்கெடுக்க கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பங்கெடுக்க முடியும். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் வசிக்கும் அமெரிக்கர்கள் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த 18 வயதைக் கடந்தவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். விண்ணப்பித்தவர்களில் இருந்து பத்து பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
சிக்கி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்தப் போட்டியைப் பற்றிய விரிவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகும் 10 நபர்களின் பெயர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்.