6 லட்சத்தைத் தாண்டிய டாடா நெக்சான் உற்பத்தி! கார் பிரியர்கள் எல்லாருக்கும் பிடிச்ச எஸ்யூவி இதுதான்!
டாடா நெக்ஸான் எஸ்யூவி 6 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் டாடா நெக்சானுக்கு இருக்கும் வரவேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எஸ்யூவி கார்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை எட்டியது. அடுத்த 9 மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யபட்டுள்ளன.
6 லட்சம் யூனிட்களில் பெட்ரோல் டீசலில் இயங்கும் மாடலுடன் எலெட்ரிக் மாடலும் அடங்கும் என்று டாடா கூறுகிறது. டாடா நெக்ஸான் காரை கடந்த 3 ஆண்டுகளுக்குள் 4 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாவும் தெரிவித்துள்ளது.
2023 இல் டாடா நெக்சான் கார் பல புதிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தோற்றம், புதுப்பிக்கப்பட்ட பவர்டிரெய்ன்கள் மற்றும் 12.3 இன்ச் பெரிய டச்ஸ்கிரீன், 360 டிகிரி கேமராக்கள், காற்றோட்டமான முன் இருக்கைகள் உள்பட பல புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டன.
புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் நெக்சானின் பெட்ரோல் காருக்கும் மின்சார காருக்கும் இடையே அதிக வேறுபாட்டைக் கொண்டு வந்துள்ளன. ஸ்டைலில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. உபகரணங்களிலும் வேறுபாடுகள் உள்ளன.
இரண்டு மாடல்களும் பவர்டிரெய்ன் புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளன. நெக்ஸான் பெட்ரோல் மாடல் புதிய டூயல் கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸைப் பெற்றுள்ளது.
தற்போது, டாடா நெக்ஸான் காரை வாங்குபவர்கள் பெட்ரோல்-ஏஎம்டி, பெட்ரோல்-டிசிடி, டீசல்-ஏஎம்டி மற்றும் ஆல்-எலக்ட்ரிக் என பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் இருந்து தேர்வுசெய்யலாம்.
டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் சந்தையில் உள்ள ஒரே சப்-காம்பாக்ட் மின்சார எஸ்யூவி காராக இருக்கிறது. இதற்கு நெருங்கிய போட்டியாகக் கருதப்படுவது இதைவிட சற்று பெரிய காரான மஹிந்திரா XUV400 தான். இந்நிலையில் வரும் மாதங்களில் புதிய வசதிகளுடன் டாடா நெக்ஸான் (TATA Nexon) எலெக்ட்ரிக் கார் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
நெக்ஸான் ஒருபுறம் இருக்க, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஆண்டுகளில் இந்திய சந்தையில் பல கார்களை அறிமுகப்படுத்த திட்டம் வைத்திருக்கிறது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் நான்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, சமீபத்தில் டாடா பஞ்ச் எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.