எடை இழப்புக்கு உதவும் வாழைத்தாண்டு பொரியல் செய்ய எளிதான ரெசிபி.!
பல மருத்துவ பயன்களை கொண்டுள்ள வாழைத்தண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் உடல் பருமனை குறைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இதை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.
பல ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ள இந்த வாழைத்தண்டை வைத்து எவ்வாறு பொரியல் செய்யலாம் என்று இங்கே காணலாம்…
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு – 400 கிராம்
பாசி பருப்பு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 2 பல்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெள்ளை உளுந்து – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தண்ணீர்
செய்முறை :
முதலில் பாசி பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் வெள்ளை உளுந்து சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதனுடன் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக மென்மையாக வெந்தவுடன் பொடியாக நறுக்கி அலசி வைத்துள்ள வாழைத்தண்டு சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
அடுப்பின் தீயை மிதமாக வைத்து வாழைத்தண்டை 3-4 நிமிடங்களுக்கு கிளறி கொண்டே இருக்கவும்.
பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.
வாழைத்தண்டு வெந்தவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் துருவிய தேங்காய், நறுக்கிய கொத்தமல்லி இலையை போட்டு நன்றாக கிளறி 2 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அனைக்கவும்.
அவ்வளவு தான் சுவையான எடை பருமனை குறைக்க உதவும் ‘வாழைத்தண்டு பொரியல்’ தயார்.