சிறுநீர்க்கசிவுக்கு ஆயுர்வேதத் தீர்வு!
நன்றி குங்குமம் டாக்டர்
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்படுகின்றனர்.
அதில் முக்கியமாக அதிகம் இன்னல்களை ஏற்படுத்தக்கூடிய ஆனால் அதிகம் பேசப்படாத ஒரு பிரச்சனை இருக்குமானால் அது யூரினரி இன்கான்ட்டினன்ஸ் எனப்படும் கட்டுப்பாடற்ற சிறுநீர்க்கசிவு என்னும் நோயாகும்.
கட்டுப்பாடற்ற சிறுநீர்க்கசிவு என்பது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி தன்னிச்சையாக ஏற்படக்கூடிய சிறுநீர்ப் போக்காகும். இது பெண்களிடம் குறிப்பாக வயதான பெண்களிடம் காணப்படும் ஒரு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய பொதுவான பிரச்சினை என்றால் மிகையாகாது. இதன் ஆரம்ப நிலையில் இருமல் மற்றும் தும்மலின் போது அவ்வப்போது சிறுநீர் போக்கு ஏற்படும். அதுவே தீவிர நிலை அடையும்போது கழிவறைக்குச் செல்வதற்கு கால அவகாசம் கூட கிடைக்காமல், சிறுநீர் வந்துவிடும். கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கானது பொதுவாக ஆண்களை காட்டிலும் பெண்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக, இளம் பெண்களும், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
பொதுவான காரணங்கள்
சிறுநீர்ப்பையின் உட்புறத்தில் ஏற்படும் அழற்சி.
பக்கவாதம்
புரோஸ்டேட் பிரச்சனைகள்
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பைக் கற்கள்
மலச்சிக்கல்
சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய கட்டி
மதுப்பழக்கம்
சிறுநீர்ப் பாதை தொற்றுகள்
தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது
தசைத் தளர்த்திகள்
பாரமான பொருட்களைத் தூக்குதல்
ஸ்க்ளெரோசிஸ் (Sclerosis) போன்ற நரம்புக் கோளாறுகள்
அறுவை சிகிச்சை செய்யும் போதோ அல்லது வெளிப்புற அதிர்ச்சியினாலோ சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளில் உண்டாகும் காயம்
மனஅழுத்தம் அல்லது பதற்றம்வகைகள்:
அர்ஜ் இன்கான்ட்டினன்ஸ்
எந்த ஒரு வெளிப்படைக் காரணமும் இன்றி திடீரென ஏற்படும் வேட்கையினால் சிறுநீர் அதிகளவில் வெளியேறுவது அர்ஜ் இன்கான்ட்டினன்ஸ் ஆகும். முறையற்ற நரம்புத் தூண்டுதலால் சிறுநீர்ப்பையானது முறையின்றி செயல்படுவதே இதற்கு பொதுவான காரணமாகும். சிலருக்கு இந்த பாதிப்பானது மனதளவிலும் காணப்படும். சிறிதளவே தண்ணீர் அருந்தினாலும், தண்ணீரைத் தொட்டாலும், தண்ணீர் பாயும் சத்தம் கேட்டாலும் கூட சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும். சிலருக்கு தூக்கத்திலேயே தன்னிச்சையாக சிறுநீர் அதிகளவில் வெளியேறிவிடும். மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ் , பார்கின்சன் நோய், அல்சீமர் நோய் ஆகிய பாதிப்புகளிலும் இந்த அர்ஜ் இன்கான்ட்டினன்ஸ் காணப்படும்.
ஸ்ட்ரெஸ் இன்கான்ட்டினன்ஸ்
உடல் செயல்கள் மற்றும் அசைவுகளில் ஏற்படும் அழுத்தத்தால் சிறுநீர்ப்பையில் இருந்து சிறிதளவு சிறுநீர் வெளியேறும்.